×

‘சின்னதம்பி’ கூண்டில் அடைபட்டு 100 நாள் நிறைவடைகிறது

உடுமலை,  மே 30:   உடுமலையில் பிடிபட்ட சின்னதம்பி யானை கூண்டில் அடைபட்டு நாளையுடன்  100 நாள் நிறைவு பெறுகிறது.விரைவில் மற்ற யானைகளுடன் பழக உள்ளது. கோவை  பெ.நா.பாளையம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சின்னதம்பி என்ற காட்டு  யானை, வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, டாப்சிலிப் வனத்தில்  விடுவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திலேயே அங்கிருந்து வெளியேறிய  சின்னதம்பி, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மற்றும் உடுமலையில் தோட்டங்கள்,  குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. உடுமலை மடத்துக்குளம் பகுதியில்  கரும்பு, வாழை தோட்டங்களில் ஒருமாதமாக  போக்குகாட்டி வந்த இந்த யானையை  பார்க்க தினசரி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இறுதியாக, பிப்ரவரி 20ம் தேதி யானை  மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப் வரகளியாறு முகாமுக்கு  கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.

வனத்தில் விடுவித்தால்  மீண்டும் திரும்பிவரும் என்பதால், கும்கியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.  இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வளர்ப்பு  யானையாக பழக்கப்படுத்தப்பட்டது. சின்னத்தம்பிக்கு தினசரி களி, ராகி கஞ்சி கொள்ளு உணவாக  வழங்கப்பட்டது. கூண்டில் அடைபட்ட நிலையிலேயே, முகாமில் உள்ள மற்ற யானைகள்  சின்னதம்பியுடன் பழகவிடப்பட்டன. கூண்டுக்குள் இருந்து துதிக்கையை வெளியே  நீட்டி மற்ற யானைகளுடன் விளையாடியது.

சின்னதம்பி கூண்டில் அடைக்கப்பட்டு  நாளையுடன்  100 நாள் நிறைவடைகிறது.எனவே,விரைவில் கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்டு மற்ற யானைகளுடன் நேரடியாக பழக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி  வனத்துறையினர் கூறுகையில், கூண்டுக்குள் இருந்தபடியே சின்னதம்பிக்கு 80  சதவீத பயிற்சி முடிந்துவிட்டது. பாகன்கள் பேசும் மொழியை அறிந்து கொண்டு  உத்தரவுக்கு கீழ்படிகிறது. இனி கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, வனத்தில்  நடைபயிற்சி, மரங்களை தூக்க பயன்படுத்தப்படும். முகாமில் உள்ள மற்ற  யானைகளுடன் சின்னதம்பி இனி சேர்ந்தே இருக்கும் என்றனர்.

Tags : Chinnathambi ,
× RELATED கீழப்பழுவூர் அருகே டூவீலர் மீது அரசு...