×

ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்க உள்ள நிலையில் திருப்பதி கோயிலில் ஜெகன்மோகன் சுவாமி தரிசனம் கான்வாயில் புகுந்து காரை மடக்கிய பெண்ணால் பரபரப்பு

திருமலை, மே 30: ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்க உள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன் ரெட்டி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் காரில் சென்றபோது கான்வாயில் புகுந்து காரை பெண் ஒருவர் மடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. விஜயவாடாவில் இன்று நடைபெறும் விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளார்.  இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நேற்றுமுன்தினம் திருப்பதி வந்தார். தொடர்ந்து திருமலையில் தங்கிய அவர் நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பி, எம்எல்ஏக்களும் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, எம்பி, எம்எல்ஏக்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டியை பார்ப்பதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அதிகளவில் கோயில் முன்பு திரண்டனர்.
 
மேலும் ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி ஏழுமலையான் கோயிலில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அவர் புறப்பட்டு சென்ற பிறகே சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  இதையடுத்து ஜெகன்மோகன்ரெட்டி கடப்பாவில் உள்ள பெரிய தர்கா, அவரது சொந்த தொகுதியான புலிவெந்துலாவில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்.
பின்னர் சொந்த ஊரான இடுப்புலபாயவில் உள்ள தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மலர் அஞ்சலி செலுத்தி விட்டு விஜயவாடா புறப்பட்டு சென்றார். தொடர்ந்து விஜயவாடா கனக துர்க்கையம்மன் கோயிலில் இன்று மாலை அவர் வழிபட உள்ளார்.

தொடர்ந்து பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து கடப்பாவிற்கு செல்வதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனம் புறப்பட்டது. அப்போது பெண் ஒருவர் திடீரென வாகனத்தின் குறுக்கே நுழைந்து நிறுத்த முயன்றார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அங்கிருந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்தனர். இதனைப்பார்த்த ஜெகன்மோகன் ரெட்டி அந்த பெண்ணை அருகில் அழைத்து விசாரித்தார்.
இதில் அவர் அமலாபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தனது கணவருக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரது விவரங்களை கேட்டு தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஜெகன்மோகன் ரெட்டி புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Jaganmohan Swamy ,darshan ,Tirupati temple ,Andhra Pradesh ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே