திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள் தர்ணா

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வரக்கூடிய குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு லாரிகள் மூலம் ராஜாஜி நகர் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்குக்கு எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு குடியிருப்புகளில் இருந்து வரும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் சுமார் 220 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், சுமார் 780 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான துடைப்பம், கூடை, பிரஷ் போன்ற உபகரணங்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. குப்பை தொட்டிகள் மற்றும் குப்பைகளை எடுத்து செல்லக் கூடிய வண்டிகளும் பழுதடைந்துள்ளது. இதனால் துப்புரவு  பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணி செய்ய முடியாமல் பெரும் சிரமப்படுகின்றனர்.

 

இதுகுறித்து மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை ஊழியர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தங்களுக்கு பணி உபகரணங்கள், சீருடை வழங்க வேண்டும், துப்புரவு ஊழியர்ககளிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் மண்டல அலுவலக வாசலில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் செங்கொடி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் செய்தனர். அப்போது தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த  திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக  சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories:

>