×

அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தம்

அம்பத்தூர்: அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அம்பத்தூர் பஸ் நிலையம் வழியாக சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு தினமும்  300க்கு மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து சிடிஎச் சாலையை ஒட்டி ஷேர் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர்.
இதனால் சிடிஎச் சாலையில் இருந்து வரும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்ல பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியவில்லை. இதனால் சிடிஎச் சாலையில் பஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல்  அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியவில்லை. அந்த வண்டிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாததால் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு ஷேர் ஆட்டோக்களால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்று வர முடியவில்லை. மேலும் பாதசாரிகளும் சிடிஎச் சாலை ஓரங்களில் நடக்க முடியவில்லை. எனவே அம்பத்துர் பஸ் நிலையத்தில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ேஷர் ஆட்டோக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் பகுதிகளில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பலரும் குடித்துவிட்டுதான் ஓட்டுகின்றனர். மேலும் சிலர் சீருடைகளை அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் தான் ஆட்டோ ஓட்டுகின்றனர்.

ஒரு சில நேரங்களில் ஆட்டோக்களில் ஏறும் பயணிகளிடம் டிரைவர்கள் மரியாதை குறைவாக பேசி வருகின்றனர். பயணிகளை புளிமூட்டைபோல் அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு பயணித்து வருகின்றனர். அம்பத்தூர் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து கொண்டு ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு, விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்’’ என்றனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாகன, ஓட்டுனர் உரிமம் இல்லாத ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதிகமாக பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களை பறிமுதல் செய்யப்படும்’’ என்றார்.


அப்புறப்படுத்த நடவடிக்கை

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது தான் இதுபோன்ற புகார்கள் வருகின்றன. அம்பத்தூர் பஸ் நிலையம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் உடனே அப்புறப்படுத்தப்படும். குடிபோதையில் ஓட்டும் ஆட்டோ டிரைவர்கள், சீருடை இல்லாத டிரைவர்கள் மற்றும் பயணிகளிடம் எல்லை மீறும் டிரைவர்கள் மீது உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Tags : bus stand ,Ambattur ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை