×

பெரியபாளையம் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு; தடுப்பணை உடையும் அபாயம்

ஊத்துக்கோட்டை, மே 30: பெரியபாளையம் பாளேஸ்வரம் ஆரணியாற்றில் இரவு நேரத்தில் நடக்கும் மணல் திருட்டால், மழைக் காலங்களில் தடுப்பணை உடையும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில்,  7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள ஆரணியாற்றில் பெரியபாளையம் கோயில் அருகில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில், மழை காலத்தில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாயத்திற்காக அந்த நீரை பாளேஸ்வரம்,  ராள்ளபாடி, சின்னம்பேடு, குமரபேட்டை, ஆரணி ஆகிய பகுதி விவசாயிகள்   பயன்படுத்துவார்கள். தற்போது, இந்த தடுப்பணை தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

இதை பயன்படுத்தி இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் மணல்  திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பெரிய அளவில் தடுப்பணையின் அருகில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தடுப்பணைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆரணி ஆற்றை சுற்றியுள்ள விவசாய நிலத்தில் பல வருடங்களாக நெல், வேர்கடலை, கரும்பு, பூ உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இதற்கு தேவையான தண்ணீரை சேமித்து வைக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று தமிழக அரசு ஆரணியாற்றின் குறுக்கே  தடுப்பணை கட்டிக்கொடுத்தது. இதனால், 10 ஆயிரம் ஏக்கரில் பயிர் வைத்து  பெரிய அளவில் பயனடைந்தோம். மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து குடிநீர் பிரச்னையும் ஏற்படாமல் இருந்தது, தற்போது, பருவமழை பொய்த்ததின் காரணமாக நீரின்றி தடுப்பணை  வறண்டது. அதன் அருகில், மணல் திருட்டு நடக்கிறது. இதனால், மழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தடுப்பணை உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்றனர்.

Tags : river ,Periyapalayam Arany ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை