×

விழுப்புரம் கோட்ட பணிமனைகளில் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் கிராமப்புறங்களுக்கு பஸ் இயக்கம் நிறுத்தம்

திருவள்ளூர், மே 30: விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி பணிமனைகளில் டிரைவர், கண்டக்டர், தொழில் நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.  இதனால் கிராமப்புறங்களுக்கு பஸ்களை இயக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் பணி நியமனம்  8 ஆண்டுளாக நடைபெறவில்லை.  டிரைவர், கண்டக்டர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பஸ்களை இயக்குவதற்கு தேவையான டிரைவர்கள், கண்டக்டர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள், தொழிலாளர்களை ஓய்வு இன்றி பணி செய்ய நிர்ப்பந்தம் செய்வதாக தெரிகிறது. இதன் விளைவாக பல இடங்களில் விபத்துக்கள் நடந்துவருகிறது.

பல கிளைகளில் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தினர் பஸ்களை இயக்காமல் ஆன் டூட்டியில் வேறு பணிகளை செய்கின்றனர். இவர்களை கிளை மேலாளர்கள் கண்டிக்க முடியாத நிலை உள்ளது. டிரைவர், கண்டக்டர்கள் இல்லாததால் பல வழித்தடங்களில், குறிப்பாக கிராமங்களில் பல இடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. பஸ்களில் டிரைவர் இருப்பார், கண்டக்டர் இருக்க மாட்டார். கண்டக்டர் இருந்தால், டிரைவர் இருக்க மாட்டார், என்ற நிலையில் சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி உட்பட பல டெப்போக்களில் மட்டும், தினமும் 20க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு டிரைவர், கண்டக்டர்கள் இல்லாமல் திணறுகின்றனர். விடுமுறை தினம், விசேஷ நாட்களில், பலர் விடுமுறையில் செல்வதால் அதிகமான பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை பராமரிப்பு பணிகள் செய்வதற்காக ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள் தொழில் பழகுநர் பயிற்சிக்காக ஓராண்டிற்கு முன் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பயிற்சி முடிந்து சென்றுவிட்டதால், பராமரிப்பு பணியாளர்கள் போதுமான அளவிற்கு இல்லை. பல பஸ்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பற்றாக்குறை பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் பஸ்களை இயக்க கிளை மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கிராமப்புற வழித்தடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Drivers ,line workshops ,Villupuram ,areas ,bus conductor stop ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...