×

முத்துப்பேட்டை பகுதியில் ஆறுகளை தூர் வாராததால் சாகுபடி பணிகள் பாதிப்பு

முத்துப்பேட்டை, மே 29: முத்துப்பேட்டைக்கு பாசன நீர் ஆதாரத்தை பெற்றுத்தரும் கோரையாறு மற்றும் பாமணியாற்றை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே இனி சாகுபடியை தடையின்றி தொடர முடியும். எனவே ஆறுகளை தூர்வாரும் பணியை துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர், நாகை மாவட்டங்கள்  காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளாகும்.  

ஆண்டுகள் தோறும் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் இந்த கடைமடை பகுதிகளில் வந்தடைந்து பாசனத்திற்கு பயன்படுத்துவது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. குறிப்பாக இந்த பகுதியில் உள்ள ஆறுகள் தலைப்பு முதல் கடைமடை வரை தூர்வாரப்படாததாலும், உரிய காலத்தில் பணிகள் தொடங்கப்படாததுமே கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையாததற்கு  முக்கிய காரணமாக உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் சுமார் 50 அடிக்கு மேல்  தண்ணீர் உள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு, பாண்டவர் ஆறு, அரிச்சந்திராநதி, திருமலைராஜன் ஆறு, சோழசூடாமணி ஆறு உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெரிய ஆறுகளும், அவற்றில் இருந்து பிரியும் நூற்றுக்கணக்கான ஏ பிரிவு பி  பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. இதுவரை அவைகள் தூர்வாரப்படாமலும், பராமரிப்பு செய்யாமலும்  உள்ளதால் மேட்டூ அணை திறக்கப்படும் நேரத்தில் தண்ணீர் விளைநிலங்களுக்கு சென்றடைவதில்  சிக்கல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஆறுகள் அனைத்தும் முற்றிலும் தூர்ந்து போய் உள்ளது. இதில் முத்துப்பேட்டை  ஒன்றிய விவசாய நிலங்களுக்கு கோரையாறு, மரைக்காகோரையாறு, கிளந்தாங்கி ஆறு, வளவனாறு மற்றும் பாமணியாற்றின் மூலமாக நீர் ஆதாரம் கிடைக்கிறது. இதன்மூலம் இப்பகுதியில் சுமார் 13 ஆயிரத்து 323 எக்டேர் விளைநிலங்கள் பாசனவசதியை பெறுகின்றன.

இதில் சுமார் 13 கிலோமீட்டர் நீளமுள்ள கோரையாறு நீண்ட பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்தூர்ந்து கிடக்கிறது. ஆகாயத்தாமரை, வேலிகாட்டாமணக்கு செடிகளும் மண்டியுள்ளதோடு கருவேல மரங்களும் ஆற்று நீரோட்டத்தை தடை செய்யும் வகையில் வளர்ந்திருக்கின்றன.
ஏற்கனவே நீர்வரத்து தாமதம், நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக முத்துப்பேட்டை ஒன்றியத்தில் சில ஆண்டுகளாக சம்பா சாகுபடி பெருமளவில் குறைந்து விட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே குறுவை சாகுபடியும் கவலையளித்தவாறு உள்ளது. ஆக ஒருபோக சாகுபடிக்கே வழியில்லை என்ற நிலைக்கு இப்பகுதி தள்ளப்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே முறையாக திட்டமிட்டு ஆறு மற்றும் கிளைவாய்க்கால்கள். வடிவாய்க்கால்கள் ஆகியன தலைப்பிலிருந்தே தூர்வாரப்பட வேண்டும். பாசன ரெகுலேட்டர்களின் ஷட்டர்களை பழுது நீக்கி சுலபமாக மேலே ஏற்றி இறக்கும் வகையில் சரி செய்ய வேண்டும்.

திருகுமதகுகளை முறையாக செப்பனிடுவதோடு அதிலுள்ள பழுதான பலகைகளையும் காலதாமதமின்றி மாற்றித்தர வேண்டும். வருடாவருடம் பெயரளவிற்கு குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதை பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்துறையினர் இனியாவது கைவிடவேண்டும். மேலும் ஆறு வாய்க்கால் தூர்வாருகையில் கரைகளை உயர்த்தி கட்டுவதோடு கரையரிப்பை தடுக்கும் மரக்கன்றுகளையும் பனைவிதைகளையும் நட்டு பராமரிக்க மாவட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியது:
குன்னலூர் வடுகநாதன்: குன்னலூர் கிளை பாசன வடிகாலான மாரியாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை, அதேபோல் பல்வேறு ஆறுகள் கிளை ஆறுகள் வாய்க்கால்கள் இந்த நிலையில்தான் இருக்கிறது. அதேபோல் ஆற்றில் உள்ள பல பகுதி மதகுகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி செல்கிறது. மணல்திட்டுகளை துரிதமாக தூர்வாரி அகற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும். தற்போது மணல்திட்டுகளோடு ஆகாயதாமரை, நெய்வேலிகாட்டாமணக்கு ஆகியனவும் மண்டிக்கிடக்கின்றன. ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தினால் விவசாயமும் செழிக்கும். வெள்ள அபாயத்திலிருந்து குடியிருப்புகளும் மீளும்.

கற்பகநாதர்குளம் சாமித்துரை: ஆறுகளை தூர் வாராததால் வரும் தண்ணீர் அதிகளவில் காணப்பட்டால் இப்பகுதியில் செல்லும் வளவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளக்காடாக மாற வாய்ப்புகள் உள்ளது. போதுமான தடுப்பு நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்யவில்லை. அதேபோல் வரும் தண்ணீரை சேமித்து வைக்கவும் முடியாது. அதனை சேமித்து வைக்கவும் உரிய நடவடிக்கை இல்லை. இதற்கு மாவட்ட ஆட்சியர் உடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன்: கஜா புயலில் சாய்ந்த மரங்கள் இன்னும் ஆறுகள் பாசன வாய்க்கால்கள் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் கிடக்கிறது. அதனை அகற்றவில்லை. நிலைமை இப்படி இருக்க  இந்தாண்டு தூர்வாரப்படுமா என்று கேள்வி குறி ஒரு பக்கம் இருந்தாலும், இந்தாண்டு விவசாயம் இப்பகுதியில் இருக்குமா என்ற சந்தேகமும் இப்பகுதி விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி விவசாயிகளுக்கு நிலத்தடி நீரை பெற்று தரும் வகையில் உள்ள  பாமணி ஆறு, வளவனாறு கோரையாறு ஆகியவற்றை தூர் வருவதை காலத்தில் துவங்க வேண்டும்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: கடந்த 2013ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது  ஆசிய வங்கி நிதியுதவியுடன் கடைமடை ஆறுகளை தூர் வாரவும், கட்டுமான பணிகளுடன் முழுமையாக சீரமைக்கவும் ரூ.1562 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணி காவிரி டெல்டாவின் ஆறுகள் அனைத்தும் மேம்படுத்தும் வகையில் அமையும். இதில் முதல்கட்டமாக ரூ.460 கோடி பணிகள் நடந்துள்ளது மீதம் பணிகள் நடக்க இருக்கிறது. இந்தாண்டிலாவது காலத்தில் துவங்கி பணியை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : rivers ,
× RELATED முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா?