×

திருத்துறைப்பூண்டி பகுதியில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும் விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, மே 29: திருத்துறைப்பூண்டி பகுதியில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை  மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருத்துறைப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமிக்கு பிறகு நிலத்தடி நீருடன் உப்பு நீர் கலந்து பல ஆண்டுகளாகி விட்டன. எனவே அப்பகுதி மக்கள் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தையே தங்களுடைய குடிநீர் ஆதாரமாக நம்பியுள்ளனர்.  கொள்ளிடம் கூட்டு குடிநீர்  பராமரிப்பு பணிகள் மற்றும் குழாய் உடைப்பு போன்ற காலங்களில் தொடர்ந்து பல நாட்கள் கொள்ளிடம் தண்ணீர் வராத காலங்களில் குடிநீருக்காக மக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.  

திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சி மக்களும் கொள்ளிடம் தண்ணீர் வரவில்லை என்றால் குடிநீருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும், குடிநீர் ஆதாரத்தை உருவாக்கிடவும் கோரையாற்றிலிருந்து சால்வன் ஆறு, வேதபுரத்திலிருந்து பிரிந்து மருதாவனம், எழிலூர், வங்க நகர் வழியாக ஒவரூரில் மரைக்கா கோரையாற்றுடன் கலக்கிறது. அதில் எழிலுரை கடந்து சால்வன் ஆறு செல்லும் போது சுமார் 50 முதல் 100 மீட்டர் அகலத்திற்கு 7 கி.மீ தூரம் பரந்து விரிந்து ஆற்று படுகையாக உள்ளது.

அதன் ஒரு பகுதி மருத வனம் வங்கநகர் மற்றொரு பகுதி நுணாக்காடு, எழிலூர் பகுதிகளையும் தொடுகிறது. எனவே  ஆற்றின் மட்டத்திலிருந்து இரண்டு மீட்டர் ஆழத்திற்கு எழிலூரில் ஏரி வெட்டினால் சுமார் 40 மில்லியன் கனமீட்டர் (அரை டி.எம்.சி) தண்ணீர் சேமிக்க வாய்ப்பு உள்ளது.  புதிய ஏரி அமைத்தால் எழிலூர், நெடும்பலம், வங்கநகர் ஆகிய கிராமங்களில் சுமார் 4850 ஏக்கருக்கு பாசனம் கிடைக்கும். திருத்துறைப்பூண்டி பகுதியில் நாளுக்கு நாள் குடிநீர் பிரச்னை அதிகரித்தது.

இந்நிலையில் எழிலூரில் புதிய குடிநீர் ஆதாரத்தை உருவாக்க ஏதுவாக ஏரி வெட்டும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகளும்,பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருவாரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் சால்வனாற்றை பார்வையிட்டு பொது பணித் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் ஏரி வெட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் உள்ளது. குடிநீர் ஆதாரத்தை உருவாக்கும் வகையில் எழிலூரில் புதிய ஏரி அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags : Agricultural Workers Union ,area ,Tiruthuraipondi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...