×

நவமலை குடியிருப்பில் மீண்டும் புகுந்த காட்டு யானை

பொள்ளாச்சி, மே 29:  பொள்ளாச்சியை அடுத்த நவமலை வனத்தில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், நள்ளிரவில் புகுந்த காட்டு யானையால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இரு கும்கி உதவியுடன் இரண்டாவது நாளாக விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.  பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள  நவமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு சிறுமி ரஞ்சனி, தொழிலாளி மாகாளி என இருவரை அடுத்தடுத்து நாட்களில், யானை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியது. அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளிடம், நவமலையில் சுற்றித்தியும் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நவமலை குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்லும் ஒன்றை காட்டு யானையை, கும்கிகள் உதவியுடன் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதைதொடர்ந்து, டாப்சிலிப் வனச்சரகத்திற்குட்பட்ட கோழிக்கமுத்தி முகாமிலிருந்து பரணி, சுயம்பு என இரண்டு கும்கிகள் வரவழைக்கப்பட்டு, நேற்று முன்தினம், காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்பணி பகல் இரவு என தொடர்ந்து நடைபெற்றது. இதற்காக வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட வனக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில், நவமலை குடியிருப்பு நோக்கி காட்டு யானை வருவதையறிந்த பரணி, சுயம்பு இரண்டு கும்கிகளும், அந்த யானையை விரட்டியது. சுமார் மூன்று கிமீ., சுற்றளவில் அங்குமிங்குமாக ஓடிய காட்டுயானை இரண்டு மணிநேரத்திற்கு பிறகு, அடர்ந்த வனத்திற்குள் சென்றது. அதன்பிறகே நேற்று அதிகாலையில் இரண்டு கும்கிகளும், நவமலை குடியிருப்பு பகுதியருகே மீண்டும் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே கும்கி யானைகளால் துரத்தப்பட் காட்டு யானை, ஆழியார் அணையைதொட்டுள்ள ஜீரோ பாயிண்டை கடந்து புளியங்கண்டி எனும் பகுதிக்கு வந்துள்ளது. அங்குள்ள தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியதுடன், கம்பிவேலியை சாய்த்துவிட்டு, மீண்டும் அடர்ந்த காட்டிற்குள் சென்றது. அதனை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நேற்று, 2வது நாளாக கும்கிகள் உதவியுடன் காட்டுயானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், பொள்ளாச்சி வருவாய் கோட்டாசியர் ரவிக்குமார், நவமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  நவமலையில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை புகுவதை தடுக்க, இன்னும் சில நாட்களுக்கு கும்கிகள் உதவியுடன் அந்த காட்டு யானையை விரட்டும் பணி தொடர்ந்து நடைபெறும், அதுவரையிலும் தொடர்ந்து கண்காணிப்பு பணி இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Navamalai ,
× RELATED கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை...