×

புதுக்கோட்டையில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை தூக்கத்தை தொலைத்து பொதுமக்கள் கடும் அவதி

புதுக்கோட்டை, மே 29: புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இரவில் தூக்கமின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொழில் சார்ந்த நிறுவனங்கள் குறைந்த மாவட்டத்தில் புதுக்கோட்டையும் ஒன்று. இருப்பினும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு மலர்கள், பழங்கள், நெல் மற்றும் காய்கறி சாகுபடிகள் அதிகம் நடைபெறுகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைந்தாலும் வெயில் அளவுக்கு அதிகமாக மக்களை வாட்டி வருகிறது.

மின்விசிறிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக வெக்கையாக உள்ளது. மின்விசிறிகளை இயங்கினால் கூட அனல்காற்றுதான் வீசுகிறது. இதனால் உடல் உஷ்னமாகி அதிக வியர்வை சுரக்கிறது. இதனால் அலுவலங்களில் பணிபுரிவோர் தங்களது பணியில் முறையாக கவனம் செலுத்த முடிவதில்லை.

இதற்கு காரணம் அக்னி வெயிலின் அசுர தாக்கம்தான். நிலைமை இப்படி இருக்கும்போது புதுக்கோட்டையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி  மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசமின்றி அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு காரணம் அக்னி வெயில் சுட்டெரிப்பது தான்.

தற்போது மின்சாரம் தடைபடுவதால் மின்விசிறி இயங்காமல் வீட்டிலும் அலுவலகத்திலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் இப்படி என்றால் இரவு நேரங்களில் சொல்லத் தேவையில்லை. இதற்கு மேலும் இரவில் மின் தடை ஏற்படுவதால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  நிம்மதியாக தூங்க முடிவதில்லை.

அதிலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது ஒருபுறம் இருக்க குறைந்த அளவு தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளும் மின்மோட்டாரை இயக்க முடியாமல் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வழியின்றி கடும் அவதிக்குளாகின்றனர். எனவே முன்னறிவிப்பின்றி அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pudukottai ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...