தேசிய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி அணி வெற்றி

கோவை, மே 29:  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் கோவை வ.உ.சி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை ஜி.கே.எம் கைப்பந்து கழக அணியும், சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி அணியும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய எஸ்.ஆர்.எம் கல்லூரி அணி 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது. இதற்கு பதிலடி தரும் விதமாக விளையாடிய ஜி.கே.எம் அணி 20-25 என்ற புள்ளிகள் கணக்கில் 2வது செட்டை தன் வசமாக்கியது. இரண்டு அணிகளும் மாறி மாறி செட்டுகளை கைப்பற்றியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. 2வது செட்டை இழந்ததும் சுதாரித்து கொண்ட எஸ்.ஆர்.எம் கல்லூரி அணி  25-10, 25-10 என்ற புள்ளிகள் கணக்கில் அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றியது. இதன் மூலம் 3-1 என்ற நேர் செட்டுகளில் ஜி.கே.எம் அணியை வீழ்த்தி எஸ்.ஆர்.எம் கல்லூரி அணி வெற்றி பெற்றது. அந்த அணி வீரர்கள் எழில்மதி மற்றும் பூஜா ஆகியோர் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.


× RELATED சேந்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்