×

மார்க்சிஸ்ட் வைத்த பேனர் கிழிப்பு தி.மு.க கூட்டணி கட்சியினர் துடியலூர் காவல் நிலையம் முற்றுகை

பெ.நா.பாளையம், மே 29: கோவை அருகே  மார்க்சிஸ்ட்  கட்சியினர் வைத்த பேனரை கிழித்து வீசியதால்  தி.மு.க கூட்டணி கட்சியினர் துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.கோவை மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட நடராஜன் வெற்றி பெற்றார். இதற்காக நன்றி தெரிவித்து துடியலூர் ரயில் நிலையம் ரோடு அரவான் கோயில் அருகில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அதை கிழித்து மேட்டுப்பாளையம் சாலையில் வீசி சென்று விட்டனர். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாலமூர்த்தி தலைமையில் தி.மு.க கூட்டணி கட்சியினர் நேற்று  துடியலூர் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் வாகன திருட்டு தடுக்க நடவடிக்கை
கோவை, மே 29: கோவை அரசு மருத்துவமனையில் வாகன திருட்டு தடுக்க தனியார் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற வருகின்றனர். நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் வாகனங்கள் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்படுகிறது. இப்படி நிறுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகிறது. மாதம் 15 வாகனங்கள் வரை காணாமல் போகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இருப்பினும், வாகன திருட்டை தடுக்க முடியவில்லை. இதை தொடர்ந்து மருத்துவமனையின் நுழைவு வாயில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டது. வெளியே செல்லும் வாகனங்களின் எண்கள் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், வாகன திருட்டை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், மருத்துவமனையில் வாகன திருட்டை தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், ‘‘மருத்துவனையில் வாகன திருட்டை தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம், தற்போது மருத்துவமனைக்கு தினமும் வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, டாக்டர் வாகனங்களின் எண்ணிக்கை போன்றவை குறித்து சர்வே செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்களின் ஆலோசனையின் படி மருத்துவமனையில் குறிப்பிட்ட இடங்களில் கேட் அமைப்பது, கேமரா பொருத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வாகன திருட்டை தடுக்க முடியும்,’’ என்றார்.




Tags : CPI (M) ,Alliance Tudialur Police Station Siege ,
× RELATED ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா...