×

தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

கரூர், மே 29: கரூர் மாவட்ட துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்ககோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை நகராட்சி, 11பேரூராட்சிகள், பல்வேறு பஞ்சாயத்து நிர்வாகங்களில் துப்புரவு பணிக்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர பகுதியை பொறுத்தளவில் கடந்த 15ஆணடாக மிக குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் வேலைசெய்துவருகின்றனர். ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த இவர்கள் தற்போது அதிக அளவில் ஒப்பந்ததார்கள் மூலமாக வேலைசெய்து வருகின்றனர்.

கரூர் நகராட்சியில் மட்டும் ஒப்பந்ததாரர்களின் கீழ் 500பேர் வரை பணியாற்றுகின்றனர். நகர பகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் கூலி வழங்கப்படுகிறது. ஒருநாளைக்கு ரூ.160கூலி கொடுக்கவேண்டும். இந்தக்கூலி ஒவ்வொரு ஒப்பந்ததாரரிடம் வேறுபடுகிறது. துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சியோ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமோ கூலியை நிர்ணயம் செய்து வழங்கவேண்டும் என கோரிவருகின்றனர்.
இதுகுறித்து உள்ளாட்சி மன்றங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் பிரதிநிதிகள் கூறியதாவது:

மலக்குழியில் மனிதர்கள் இறங்கிவேலை செய்வதுதடை செய்யப்பட்டுள்ளது. அப்படிபணி செய்யவேண்டுமானால் 15விதமான உரிமங்களை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்ச கூலி இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. சமூகபாதுகாப்பு குறைந்தபட்ச சட்டங்களைக்கூட மாநிலஅரசு செயல்படுத்துவதில் ஆர்வம்காட்டாமல் உள்ளது. சமூகபாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. துப்புரவு பணியாளர்களின் நலவாரியம் செயல்படாமல் இருக்கிறது. அரசு துறைகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் தவிர  தனியார் நிறுவனங்களிலும் துப்புரவு பணியாளர்கள்வேலை செய்கின்றனர். தினக்கூலி அடிப்படையில் தாம் அதிகம்பேர் பணிசெய்கின்றனர். 80சதவீதத்திற்குமேல் பெண்கள், சுயஉதவிக்குழு வழியாக பணிபுரிபவர்கள் அதிகமாக உள்ளனர்.

கிராமஊராட்சியில் நியமன பணியாளர்களில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஆவணம் இருந்தால் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.3,300  அளித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.  நகர பகுதியில் தினக்கூலி அடிப்படையில் ஒருநாளைக்கு ரூ.160.  நகராட்சிநேரடி ஒப்பந்த அடிப்படையில் ரூ.7ஆயிரம் அளிக்கின்றனர். செய்யும் பணி ஒன்றாக இருந்தும் ஒவ்வொருபகுதியிலும் கூலி வித்தியாசமாக கொடுக்கின்றனர். கையால் கழிவுகளை அள்ளும் நிலை இன்னும்தொடர்கிறது., கிராமம், பேரூராட்சி, நகராட்சியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாத நிலை உள்ளது.

நகர பகுதியில் பலஆண்டுகளாக ரூ.3ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம்  வரை குறைந்த மாதசம்பளம் கொடுத்து அதிகவேலைகளை வாங்குகின்றனர். தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இருந்தும் மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. குடிசைமாற்று வாரியத்தால்  புதிய குடியிருப்புகளை அரசு கட்டவில்லை. பழைய குடியிருப்புகளிலேயே குடியிருந்து வருகிறோம். பசுமைவீடுகள் திட்டத்திலும் முன்னுரிமை அளிக்கவில்லை. கட்டாய இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்படும் அதையும் செயல்படுத்தவில்லை என்றனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு