×

மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் வறண்டதால் கடும் குடிநீர் பஞ்சம்

தர்மபுரி, மே 29: தர்மபுரி மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டதால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் ஏரி குளங்களுக்கு நீர்வரத்து இன்றி வறண்டது. விவசாய கிணறு, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. ஒருசில கிணறு, ஆழ்துளை கிணறுகளில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த சூழலில் தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு சரிந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 12.02 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது 2.16 மீட்டர் குறைந்து, 14.18 ஆக இருக்கிறது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் 3.13 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.

நீர்மட்டம் குறைவால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் போர்வெல்லில் தண்ணீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் வாரத்திற்கு இரண்டுநாட்கள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் தண்ணீர் சரியாக செல்லுவதில்லை. அவர்கள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்று தண்ணீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கிணற்று தண்ணீர், போர்வெல் தண்ணீரும் வற்றிவிட்டன. ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் திறந்தவிடப்படுகிறது.

கொளகத்தூர் கிராமத்தில் பஞ்சாயத்து சார்பில் வழங்கும் பொர்வேல் தண்ணீரை பிடிக்க சிறுவர், சிறுமிகள் தண்ணீர் வழங்கும் இடத்தில் நேற்று காத்துகிடந்தனர். அந்த போர்வேலில் தண்ணீர் வற்றிவிட்டது. தண்ணீர் ஊறிய பின்னர் வினியோகம் செய்யப்படும். அப்போது தண்ணீர் பிடித்து செல்கின்றனர். ஒருசிலர் அதிக குடத்தில் தண்ணீர் பிடித்து சென்றுவிடுகின்றனர். அதற்காக ஒரு குடும்பத்திற்கு 10 குடம் தண்ணீர் மட்டுமே பிடிக்க வேண்டும். அதிகம் பிடித்தால் ₹200 செலுத்த வேண்டும் என்று சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. ஏமகுட்டியூர், தோக்கம்பட்டி, நேருநகர், ஒட்டப்பட்டி, அவ்வைவழி, பெருமாள்கோயில் மேடு, தண்டுகாரம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தில் பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சமுக ஆர்வலர் வினோத் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க, ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் அனைத்து பகுதிக்கும் சரியாக செல்லுவதில்லை. இதனால் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் குடிநீராகவும், புழக்கத்திற்கும் நிலத்தடிநீரையே நம்பி உள்ளனர். அணைகள், ஏரிகள், குளம், கிணறுகள், பொர்வேல்கள் வறண்டுவிட்டன. தண்ணீர் தேடி கிராம மக்கள் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் சைக்கிள், டூவிலரிலும், ஆட்டோவிலும் குடங்களுடன் செல்கின்றனர். நிலத்தடிநீர் உயர அனைவரும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உடனே கடைபிடிக்க வேண்டும். அரசு கட்டிடங்களில் முதலில் செயல்படுத்த, தமிழக அரசு முன் வர ேவண்டும் என்றார்.

Tags : draining ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...