×

அரசின் வறட்சி நிதி வழங்காததால் குடிநீருக்காக திண்டாடும் பொதுமக்கள்: குழப்பத்தில் தவிக்கும் ஊராட்சி நிர்வாகம்

திருக்கழுக்குன்றம், மே 29:திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், 54 கிராம ஊராட்சிகள் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இதுபோன்ற கோடை காலத்தில் அரசு சார்பில் சிறப்பு நிதியாக வறட்சி நிவாரண நிதி வழங்கப்படும். அந்த நிதியின் மூலம் குடிநீர் கிணறுகளை ஆழப்படுத்துதல், பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல், பழுதான போர்வெல்களை சீரமைத்தல் போன்ற குடிநீர் சம்பந்தமான பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், நீர் ஆதாரங்களை பெருக்கி மக்களுக்கான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யப்படும்.

ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் முடியும்  நிலைக்கு வந்த பிறகும், அரசு சார்பில்த வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை. இதனால், ஊராட்சிகளில் குடிநீருக்காக மக்கள் தினமும் திண்டாடி வருகின்றனர். சில இடங்களில் கிணற்று நீரையும், சில இடங்களில் பம்ப் செட் நீரையும் கொண்டு வந்து குடிக்க வேண்டியுள்ளது.ஒரு சில இடங்களில்  குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டியுள்ளது. இதற்காக பல மணி நேரம் வீணாகிறது. இந்த குடிநீர் பிரச்னையை சரி தீர்க்க கோரி பல ஊராட்சிகளில் பொதுமக்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியும், இது வரை குடிநீர் பிரச்னை தீரவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர், தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. பாலாற்றை உள்ளடக்கிய இந்த ஒன்றியத்திலேயே குடிநீருக்காக மக்கள் திண்டாட வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்க கூடிய வறட்சி நிவாரண நிதியை, உரிய முறையில் வழங்கியிருந்தால் இதுபோன்று குடிநீருக்கு திண்டாட வேண்டிய நிலை வந்திருக்காது.

உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத நிலையில் ஊராட்சி செயலர்களிடம் கேட்டால், ‘‘அரசு நிதி ஒதுக்காமல் நாங்கள் என்ன செய்ய முடியும்’’ என கூறுகிறார்கள். அரசோ, அரசு அதிகாரிகளோ  இதை பற்றி கவலைப்படாமல் உள்ளனர். தேவையான நேரத்தில் அத்தியாவசிய நிதியை ஒதுக்கி குடிநீர் உள்ளிட்ட மக்கள் தேவையை பூர்த்தி செய்வதற்கு வழிவகை செய்யாமல் மக்கள் எவ்வளவு தான் கோரிக்கை விடுத்தாலும், ‘‘செவிடன் காதில் ஊதிய சங்காய்’’ அதிகாரிகள் உள்ளனர் என்றனர்.

Tags : Citizens ,state ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...