×

தேர்தல் முடிந்ததால் சொந்த ஊர் செல்ல விரும்பும் அதிகாரிகள் மீண்டும் இடமாற்றத்திற்கு காத்திருப்பு

உத்தமபாளையம், மே 29:  தேனி மாவட்டத்தில் தேர்தலுக்காக மாற்றலாகி வந்த அதிகாரிகள் மீண்டும் பழைய ஊர்களுக்கு செல்ல முயற்சிகளை தொடங்கி உள்ளனர். தேனி மாவட்டத்தில் காவல்துறையில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு சொந்த ஊர்களை காரணம் காட்டியும், 3 வருடங்களை முடித்ததை காரணம் காட்டியும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். அதிகாரிகள் லெவலில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். போலீஸ்காரர்கள் சப் டிவிசன் அளவில் மாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள் என பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே மாற்றங்கள் நடந்தன. இப்போது தேர்தல் முடிந்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அதிகாரிகள் மாற்றங்கள் அப்படியே நீடிக்குமா அல்லது ஏற்கனவே பணியில் இருந்த மாவட்டங்களுக்கு திருப்பி செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையில் சிலரை தவிர பெருமளவில் தாங்கள் ஏற்கனவே வேலை செய்த மாவட்டங்களை நோக்கி செல்ல விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காரணம் அங்கு தங்களது பிள்ளைகளின் படிப்பு, பக்கத்து ஊர்களில் தங்களது வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பணிகள் என அங்கு செல்ல விரும்பினாலும், ஒரு சில அதிகாரிகள் தற்போது உள்ள ஊர்களிலேயே நீடிக்க விரும்புகின்றனர். இதேபோல் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைகளில் வேலை செய்வோர் தங்களது பழைய ஊர்களில் பணியாற்றிய இடங்களுக்கு செல்வதா அல்லது இங்கேயே நீடிப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். எனவே மாற்றலாகி செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகள் உரிய பரிந்துரை செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு பணிகளில் சேர்ந்தாலும், தற்போது பள்ளிக்காலம் என்பதால் திடீரென மாற்றலாகி சென்றால் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் குழப்பம் வரும். அதேநேரத்தில் இங்கேயே நிரந்தரம் என்றால் அதற்கு ஏற்றார்போல் நடைமுறைகளை வகுக்க தேவையான முயற்சிகள் செய்யப்படும் என்றனர்.

Tags : election ,transfer ,hometown ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...