×

ஆர்.கே.பேட்டை, திருத்தணியில் குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் திடீர் சாலை மறியல்: காலிகுடங்களுடன் திரண்டதால் பரபரப்பு

பள்ளிப்பட்டு, மே 29: ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாலையின் குறுக்கே காலிகுடங்களை வைத்து கிராம மக்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.பேட்டை அருகே குடிநீர் கேட்டு நேற்று காலை காலி குடங்களுடன் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.பேட்டை அடுத்த நாராயணபுரம் ஊராட்சி, கீழ்மோசூர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாகவே குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி பல கிமீ தூரம் செல்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், ஊராட்சியின் மெத்தனப் போக்கை கண்டித்து நேற்று காலை அம்மையார்குப்பம்-ஆர்.கே.பேட்டை சாலையில் வாகனங்களை வழிமறித்து, காலி குடங்களுடன் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்ததும் ஊராட்சி செயலாளர் சம்பவ இடத்துக்கு வந்து  மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண ஆழ்துளை கிணறு விரைவில் அமைக்கப்படும் என உறுதி கூறினார். அதை ஏற்று,  மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார்  அரைமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில், ‘’எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை குறித்து ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் குடிநீர் தேடி காலி குடங்களுடன் வெவ்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் அலைந்து வருகிறோம்’’ என கூறினர். திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு கிராமத்தில் நாயுடு தெரு, முதலியார் தெரு, மெயின் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அங்குள்ள வயல்வெளிக்கு சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். ேபாதிய தண்ணீர் இல்லாததால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி - நல்லாட்டூர் சாலையில் உள்ள பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று காலிகுடங்களுடன் திரண்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் செங்கலா, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன்  ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : RKPade ,Tiruttani ,
× RELATED திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில்...