×

அம்மன் கோயில் விழா உடலில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

அவனியாபுரம், மே 29: மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் தேவாங்கர் மகாஜன அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட  ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 20ம் ஆண்டு மகா உற்சவ விழா நடந்தது. விழா முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக கோயிலிலிருந்து வைகை ஆற்றுக்கு சுவாமி பெட்டி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு அம்மனுக்கு வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா குறித்து கோயில் நிர்வாகி ராஜேஸ்வரி கூறுகையில், ‘‘இந்த விழா மிகவும் தொன்மையானது. காப்பு கட்டி, விரதமிருக்கும் பக்தர்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதனால் அம்மன் மனமிறங்கி பக்தர்களின் வாழ்வில் அனைத்து வளங்களையும் அளிப்பார். மேலும் மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் எல்லா வளமும் பெறவும் அருள் புரிவார்’’ என்று தெரிவித்தார்.

Tags : Devotees ,Amman Temple Festival ,
× RELATED திருவாடானை அம்மன் கோயில் விழாவில் அரவான் படுகளம் நிகழ்வு