×

சான்றிதழ் கேட்டு 77 நாட்களுக்கு பின் தாலுகா அலுவலகத்தில் அலைமோதிய மக்கள்

மதுரை, மே 29: தேர்தல் நடத்தை விதிமுறைக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 77 நாட்களுக்குப் பின் சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி கடந்த மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் தேர்தல் கடந்த ஏப்.18ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த 23ம் தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 26ம் தேதி தேர்தல் ஆணையம் விலக்கிக்கொண்டது. .நடத்தை விதியால் பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ், வருமானச்சான்று, இருப்பிட சான்று, மாணவர்களுக்கு முதல் பட்டதாரி உள்ளிட்ட பல்வேறு வகை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 77 நாட்களாக அரசு பணிகள் தேக்கமடைந்தன. தேர்தல் நடத்தை விதிமுறையால், பொதுமக்களும் தங்களது கோரிக்கை மனுக்களை அரசு அதிகாரிகளிடம் வழங்க முடியாத நிலை இருந்தது. இதனை காரணம் காட்டி அதிகாரிகளும் சான்றிதழ் வழங்க மறுத்தனர்.

தேர்தல் தொடர்பான பணிகள் முடிந்து நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, வழக்கமான அரசு பணிகள், சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மே.27 முதல் வழக்கமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார் அட்டை, மாணவர்களுக்கு முதல் பட்டதாரிக்கான சான்றுகள் தேவைப்பட்டது. இதனைகேட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மதுரை வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள், மாணவர்கள் நேற்று குவிந்தனர். ஆன்லைன் மூலம் இப்பணி நடப்பதால், இசேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள், பொது மக்கள் காத்திருந்தனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலக இசேவை மையத்திலும் கூட்டம் அலைமோதியது. தேர்தல் நடத்தை விதியால் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை. தேர்தல் விதிமுறை தளர்த்தப்பட்டதால், கலெக்டர் அலுவலகம் முன்புள்ள கணினி மையத்தில் பதிவேற்றம் செய்ய மக்கள் கூடினர்.

Tags : office ,Taluka ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...