×

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் வேலைநிறுத்தம்

கொடைக்கானல், மே 29: தமிழகத்தில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் கொடைக்கனாலில் நடந்தது. சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகிக்க, தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் முன்னிலை வகித்தார். 2 நாட்கள் நடந்த இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பின்னர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது, ‘அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்னைகளை தமிழக அரசு தீர்க்கவில்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நிலுவை தொகைகளை கூட கொடுப்பதற்கு இழுத்தடிப்பு செய்கின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை என்று 2 மாதங்கள் ஓடிவிட்டன. ஊழியர்கள் நலனிலும், பொதுமக்கள் நலனினும் எந்தவித நடவடிக்கைளை எடுக்க இந்த அரசு முன்வருவதில்லை. வரவு, செலவு ஈடுகட்டி போக்குவரத்துக்கழகம் நடத்தப்படும் என அரசு கூறியது.

ஆனால் ஊழியர்களின் பணத்தை வைத்து கழகத்தை நடத்தி வருகிறது. நிலுவைத்தொகை ரூ.6 ஆயிரம் கோடி இன்னமும் பாக்கியாக உள்ளது. தமிழகத்தில் பல தொழில்கள் பாதிக்கப்பட்டு வரும்போக்கு தொடர்ந்து நீடிக்கிறது. புதிய தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு கூட அரசு கட்டுப்பாடு விதித்து வருகிறது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு தேர்தலுக்கு பின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை திட்டங்கள் என வேதனையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 2 திட்டங்களையும் அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் சிஐடியு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும். தற்போது மீண்டும் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு தொழிலாளர்களுக்கு மிக மிக ஆபத்தான அரசாகும். 46 தொழிலாளர்களின் சட்டங்களை சுருக்கி அவர்களின் உரிமையை பறிப்பது போன்று பல சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. நூறு தொழிலாளர்கள் உள்ள நிறுவனத்தை உரிய முன் அனுமதிகளின்றி மூட முடியாது என்பது பழைய சட்டம். ஆனால் தற்போது 300 பேர்கள் தொழில் செய்யும் தொழிற்சாலை மட்டுமே மூட முடியும் என்று மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது .இது மிக மிக மோசமான நிலையாகும். இதேபோல மோட்டார் வாகன திருத்தச்சட்டமும் பல தொழிலாளர்களின் வேலை இழப்புக்கு காரணமாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamilnadu ,pavilions ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு