×

கீழ்கட்டளை, புழல் பகுதிகளில் தூர்ந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆலந்தூர்:  பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மழை காலங்களில் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், மடிப்பாக்கம் அய்யப்பன் ஏரியில் கலக்கும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், நீண்ட காலமாக இவற்றை தூர்வாராததால் குப்பை குவியலாகவும், தூர்ந்தும் காணப்படுகிறது.

குறிப்பாக, ஏரிக்கரை தெருவில் உள்ள மழைநீர் கால்வாய் முழுவதும் மணல் மேடாக காட்சியளிக்கிறது. இதில் உடைந்த கான்கிரீட் பைப்புகள் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், கோடை காலம் முடிந்து மழை பெய்ய தொடங்கினால், மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாருவதே இல்லை. இதனால், பெரும்பாலான கால்வாய்கள் தூர்ந்து கிடக்கிறது.

மழை வந்தபிறகு பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து, அந்த நேரத்தில் வேலை பார்ப்பதை விட  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கால்வாய்களைதூர்வார வேண்டும்,’’ என்றனர். புழல்: சென்னை மாநகராட்சி 22, 23வது வார்டு பகுதிகளான புழல் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை, சைக்கிள் ஷாப் முதல் சுடுகாடு அம்பேத்கர் சிலை, புனித அந்தோணியார் நகர் மத்திய சிறை சாலை, கன்னடபாளையம், காவாங்கரை பகுதியில் சுமார் ஒன்றரை கி.மீ தூரம் கொண்ட மழைநீர் கால்வாய் உள்ளது.

இந்த கால்வாயை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், குப்பை மற்றும் கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு தூர்ந்து கிடக்கிறது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மாதவரம் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்குள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : underground ,
× RELATED பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவில்...