×

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு ஆட்சியர் கண்டிப்பு

கடலூர், மே 29:  கடலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து 161 மனுக்களை பெற்ற  அவர் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து தீர்வுகாணுமாறு சம்பந்தப்பட்ட  துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை அடுத்து அவர்   அங்கிருந்த அலுவலர்களிடம் இதுவரை குறைகேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட  மனுக்களின் நிலை, முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் அம்மா கால் சென்டரில்  இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது  குறித்து கேட்டார்.

அப்போது பெரும்பாலான அரசுத்துறை அலுவலர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வராமல் தங்கள் இளநிலை உதவியாளர்களை அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது. ஆட்சியரின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் இளநிலை  ஊழியர்கள் தடுமாறினர். மனுக்கள் தொடர்பான கோப்புகளையும் அவர்கள் கொண்டு  வரவில்லை.  அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன் அவர்களை கண்டித்ததோடு அடுத்து வரும் கூட்டத்திற்கு  சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.  அதில் ஒரு சிலர் 3 மாதங்களுக்கு மேலாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்  இருந்தனர். அவர்களை எச்சரித்த ஆட்சியர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்குமாறு  உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி  மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தப்பட்டதற்கும் ஆட்சியர் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


Tags : ruler ,meeting ,
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...