×

விருத்தாசலம் பஸ்நிலையம் அருகே முறிந்து விழும் அபாயத்தில் சிக்னல் கம்பம்

விருத்தாசலம், மே 29:  கடலூர் மாவட்டத்தில் உள்ள நகரங்களில் விருத்தாசலம் நகரம் மிக முக்கிய நகரமாக விளங்குகிறது. விருத்தாசலத்திலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து வசதி கொண்ட பேருந்து நிலையம் உள்ளது.  இதனால் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் பேருந்து நிலையம், பாலக்கரை, கடலூர் ரோடு, கடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன ஓட்டிகளின் கவனத்திற்காக போக்குவரத்து காவல் சார்பில் கடந்த  4வருடங்களுக்கு முன்பு சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த சிக்னல்கள் இதுவரை பயன்பாட்டிற்கே வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. மேலும் பல சிக்னல் கம்பங்கள் தானாகவே முறிந்து விழுந்து விட்டது. இதுபோல் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள்  வெளியே வரும் பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் ஒன்று மிகவும் பழுதடைந்து முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடி  வருவதால் பொதுமக்களின் தலையில் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் உள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிக்னல் கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : collapse ,bus stand ,Vriddhachalam ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி