×

பைனான்சியரை அடைத்து வைத்து தாக்கிய கும்பல் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி, மே 29: புதுவை வேல்ராம்பேட் ஏரிக்கரை அருகே பைனான்சியரை அடைத்து வைத்து தாக்கிய கும்பல் மீது 5 பிரிவுகளின் கீழ் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுவை லாஸ்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (37). பைனான்சியரான இவரை பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் சம்பவத்தன்று ஒரு கும்பல் வேல்ராம்பேட் ஏரிக்கரை அருகிலுள்ள கேள் டிவி அலுவலகத்துக்குள் அடைத்து வைத்து இரும்பு பைப், கேபிள் வயர் உள்ளிட்டவற்றால் தாக்கி மிரட்டியது. இது தொடர்பாக அவரது தொழில் பார்ட்னரான வில்லியனூர், மணவெளி ராஜாவுக்கு சபாிநாதன் தகவல் தெரிவித்து ரூ.10 லட்சம் கேட்டு தன்னை ஒரு கும்பல் தாக்குவதாக தெரிவித்தார். இதையடுத்து சபரிநாதன் மனைவியுடன் லாஸ்பேட்டை காவல் நிலையம் சென்ற ராஜா, கடத்தல் தொடர்பாக புகார் கொடுத்தார்.  லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிந்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை பிடிக்க 100 அடி ரோட்டில் தயாராக இருந்தனர்.  போலீசுக்கு சென்ற தகவல் தெரிய வரவே, சபரிநாதனை திடீரென விடுவித்துவிட்டு கும்பல் தலைமறைவானது.

 இதையடுத்து பலத்த காயங்களுடன் முதலியார்பேட்டை காவல் நிலையம் வந்த சபரிநாதன், நடந்த சம்பவத்தை கூறி நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். மேலும் சபரிநாதனை யார், யார் எதற்காக தாக்கினர் என்ற விவரம் பதிவிடப்பட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் லாஸ்பேட்டை கடத்தல் வழக்கானது முதலியார்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் நடந்த சம்பவம் பற்றி சபரியிடம் புகாரை பெற்ற போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு கும்பலாக கூடுதல், அடைத்து வைத்தல், ஆயுதங்களால் தாக்குதல், மிரட்டல் விடுத்தல் உள்பட 5 பிரிவுகளின்கீழ் தேங்காய்திட்டு சரவணன், முதலியார்பேட்டை தீபன், குள்ளராமு, ரஞ்சித் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : financier ,
× RELATED பைனான்சியரிடம் மிரட்டி ₹50 ஆயிரம் பறிப்பு மேலும் 2 பேர் கைது வேலூரில்