×

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஆயத்த ஆடை கண்காட்சியில் பங்கேற்க ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

திருப்பூர், மே 28: பிரான்ஸ் நாட்டில் வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள ஆயத்த ஆடை கண்காட்சியில் பங்கேற்க, திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் என உலகளாவிய நாடுகளில், ஆயத்த ஆடை கண்காட்சிகள் ஏராளம் நடக்கின்றன. வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகளில், நமது நாட்டு ஏற்றுமதியாளர்களை பங்கேற்கச் செய்து, ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), முயற்சித்து வருகிறது. உலகின் பேஷன் நகரங்களில் பிரதானமானதாக உள்ளது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரம். அந்நகரில் ஆண்டுக்கு இரண்டு முறை ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெறும்.

இதில் பாரீஸில் அடுத்தது யார் என்கிற கண்காட்சி சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. ஐரோப்பிய நாட்டு நிறுவனங்கள், இந்த கண்காட்சியில் பங்கேற்று, வர்த்தக விசாரணைகள் நடத்துகின்றன. நடப்பு ஆண்டுக்கான இந்த கண்காட்சி, செப்டம்பர் 6ல் துவங்கி 9ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்த கண்காட்சியில், ஏ.இ.பி.சி., பங்கேற்கிறது. நமது நாட்டு ஆடை ஏற்றுமதியாளர்கள் கண்காட்சியில், ஆடை ரகங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று, புதிய வர்த்தகர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, பிரான்ஸ் நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. வரும், 17ம் தேதிக்குள் விண்ணப்பிப்போருக்கு, கண்காட்சிக்கான அரங்க கட்டணத்தில், 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags : garment exhibition ,France ,
× RELATED சென்னை -பாரிஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 5 மணி நேரம் தாமதம்