×

எச்.ஏ.டி.பி., மைதானம் சீரமைக்கும் பணி துவக்கம்

ஊட்டி, மே 28:  கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி இருந்த ஊட்டி எச்ஏடிபி., மைதானம் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ள ஊட்டியில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது, அவர்களின் விளையாட்டு திறன் அதிகரிக்கிறது.

இதனால் பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இந்த மைதானத்தில் சாதாரண ஓடுதளம் மட்டுமே இருந்தது. இதைதொடர்ந்து சிந்தெட்டிக் ஓடுதளம் அமைக்க திட்டமிடப்பட்டு ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சிந்தெட்டிக் ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணிகளுக்காக கொண்டு வரப்பட்ட பொருட்கள், மண் ஆகியவை புல் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டது.

இதனால் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்தது. ஆனால் புல் வளர்ந்தும், மண் குவிந்தும் காணப்பட்ட ைமதானம் சீரமைக்கப்படாமலேயே இருந்து வந்தது.

இதனால் விளையாட்டு வீரர்கள் அரசு கல்லூரி மைதானத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் எச்ஏடிபி., மைதானம் பராமரிப்பின்றி மேடு பள்ளமாக காணப்பட்ட புல்வெளி விளையாட்டு தளம் சீரமைக்கும் பணிகள் நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது. டிராக்டர் கொண்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. பருவமழை பெய்யும் போது புற்கள் நன்கு வளர்ந்து மைதானம் பசுமையாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிந்தெட்டிக் ஓடுதள பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், 4 இடங்களில் உயர்கோபுர ஐமாஸ் விளக்குகள் அமைக்கப்படாமல் இருந்தது. நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் ஐமாஸ் விளக்குகள் அமைக்கும் பணிகளும் விரைவில் நடக்க உள்ளன.

Tags :
× RELATED நீலகிரி ஓட்டல்களில் கெட்டுப்போன,...