×

ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு ஈரோட்டில் மர்மநபர்கள் மீண்டும் கைவரிசை

ஈரோடு, மே 28: ஈரோட்டில் ஓடும் ரயிலில் ஜன்னலோரம் பயணித்த பெண்ணிடம் மர்மநபர்கள் 5பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர். ஈரோடு   ரயில்வே ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு   முன்பு ஜன்னலோரம் பயணிக்கும் பெண்களை குறிவைத்து 10க்கும் மேற்பட்ட பயணிகளிடம் சுமார் 30பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். செயின்  பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 4  கொள்ளையர்களை ரயில்வே  போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது  செய்தனர்.

இந்நிலையில்,  ஓசூர் கேபிஜி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி  நிர்மலா(48) என்பவர் அவரது  குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு  மைசூர் செல்லும் ரயிலில்  முன்பதிவு பெட்டியில் பயணித்தார். நிர்மலா ஜன்னலோர சீட்டில்  படுத்திருந்தார். ரயில் நேற்று நள்ளிரவு சுமார்  1.30 க்கு இந்த ரயில் ஈரோடு ரயில்வே  ஸ்டேஷன் பிளாட்பார்ம் 1க்கு வந்தது. பின்னர் ரயில்  ஈரோடு ஜங்ஷனில் இருந்து  புறப்பட்டு மெதுவாக நகர துவங்கியது. அப்போது நடைமேடையில் நின்று  கொண்டிருந்த மர்மநபர் ஒருவர் கண் இமைக்கும்  நேரத்தில் நிர்மலாவின்  கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து  கொண்டு தப்பி சென்றார்.

இதனையடுத்து சேலம் ஜங்ஷனை  அடைந்ததும், நிர்மலா தனது  குடும்பத்தினருடன் இறங்கி ரயில்வே போலீசில்  புகார் அளித்தார். ஆனால் சம்பவ  நடந்த இடம் ஈரோடு என்பதால், சேலம் போலீசார்  ஈரோடு ரயில்வே போலீசார்  விசாரணைக்கு புகாரை மாற்றினர். இதன் அடிப்படையில்,  ஈரோடு ரயில்வே போலீசார்  வழக்கு பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட  மர்மநபரை தேடி  வருகின்றனர்.

Tags : chauffeur ,Erode ,
× RELATED மின்சார ரயில் மோதி பெண் பலி