×

மாவட்ட அளவிலான டி-20 கோவை கினைட்ஸ் அணி அசத்தல் வெற்றி

கோவை, மே 28: கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டி-20 போட்டியில் கோவை டஸ்கர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கினைட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஆகியவை
சார்பில் மாவட்ட அளவிலான டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 42 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடக்கிறது. நேற்று ரத்தினம் கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் கோவை கினைட்ஸ் அணியும், கோவை டஸ்கர்ஸ் அணியும் மோதின.  

முதலில் பேட்டிங் செய்த கோவை டஸ்கர்ஸ் அணி, கோவை கினைட்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த டஸ்கர்ஸ் அணி 13 வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை கினைட்ஸ் அணி தரப்பில் வீரமணி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக பேட்டிங் செய்த கோவை கினைட்ஸ் அணி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 4.4 ஓவரிலேயே கடந்து அபார வெற்றி பெற்றது.

4.4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்தது. அந்த அணியின் வீரர் ஸ்ரீ நிரஞ்சன் சிறப்பாக விளையாடி 79 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் கோவை கினைட்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. கோவை தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டிகளில், ஈ.ஏ.பி.சி.ஏ அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் விஜய் சி.சி அணியையும், ஸ்ரீராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜி.சி.சி அணியையும் வீழ்த்தின. இதேபோல  ஸ்ரீராமகிருஷ்ணா மில்ஸ் அணி, ஆர்.எம்.எம்.சி.சி அணி , சூர்யபாலா அணி மற்றும் ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரி அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தன.

Tags : Coimbatore ,wins ,team ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு