×

கொடுமுடியில் பேரூராட்சியில் உறங்கும் அரசு துறைகள்

கொடுமுடி, மே 28:  கொடுமுடி பேரூராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொது கழிவறைகளுக்கு செல்லும் பாதையை தனியார் ஆக்கிரமித்து, ஆண்டுகள் பல ஆகியும் உறங்கும் அரசு துறைகளால் அரசு நிலமும் அதில் கட்டப்பட்ட கட்டிடங்களும் வீணாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியின் 5வது வார்டில் நுழைவு பாலம் அருகே உள்ளது மாரியம்மன் கோயில். இதன் எதிரில் உள்ளது இரும்புபாலம்.

இந்தப்பாலம் அருகே காலிங்கராயன் கசிவு நீர் மற்றும் மழைக்கால வெள்ளநீரை வெளியேற்றும் கால்வாய் ஒன்று உள்ளது.  புகளூரான் கால்வாயை நோக்கி செல்லும் இந்த கசிவு நீர் கால்வாயின் கரையில்  பயணியர் விடுதி  உள்ளது.  இதன்  எதிரே மறுகரையில் கால்வாயை ஒட்டி மிகப்பெரிய அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் எழுநூற்றி மங்களம் ஊராட்சிக்கு காவிரி குடிநீரை கொண்டு செல்லும் நீரேற்று நிலையம் மற்றும் அதனை ஒட்டி மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட மூன்று கழிப்பறை வளாகங்கள் உள்ளன.இந்த மூன்று கழிப்பிட கட்டிடங்களில் ஒரு கட்டிடம் கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது ரூ 2.25 லட்சம் மதிப்பில் 14 இருக்கைகளுடன் கூடியதாக கட்டித் தரப்பட்டது. இதனை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் வரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அந்த கழிப்பறைகளுக்கு செல்லும் பாதையை தனியார் ஒருவர் முழுவதுமாக ஆக்ரமித்து பாதையின் குறுக்கே சுவற்றை எழுப்பியுள்ளார்.

இதனால் மக்கள் அந்த  கழிப்பறைகளுக்கு  செல்லமுடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இது தவிர மக்களின் உபயோகிக்க முடியாமல் போனதால் கழிப்பறை கட்டிடங்கள்  முட்புதர்கள் சூழ்ந்து அழிந்து வருகின்றன. அங்கே உள்ள மூன்று கழிப்பறைகளில் இரண்டு கழிப்பறைகள் முழுவதுமாக முட்புதர்களின் அரவணைப்புகுள் அமிழ்ந்து போனதால் வெளியில் தெரியாத நிலையில் காணப்படுகிறது.

மூன்றாவது  கழிப்பறையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.  இதற்கு காரணம் அரசு நிலத்துக்கு செல்லும் பாதையை தனியார் மறித்து சுவர் எழுப்பியதுதான் அங்கே செல்ல வழியில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.இது குறித்து உள்ளாட்சிதுறை,  வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள்  கண்டுகொள்ளாமலே உள்ளனர்.

இதனால் அரசுக்கு சொந்தமான இடத்தில் பல லட்சம் ரூபாய்களை இறைத்து கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழாகி கிடப்பதுடன் தற்போது அரசுக்கு சொந்தமான அந்த இடமும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா ?   கழிப்பறைகள் பொது பயன்பாட்டிற்கு மீண்டும் வருமா? என்ற எதிர்பார்ப்பில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உள்ளனர்.

Tags : government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...