×

மாவட்டத்தில் மழையில்லாததால் தொடர்கதையாகும் குடிநீர் தட்டுப்பாடு காலிக்குடங்களுடன் காத்திருக்கும் அவலம்

விருதுநகர், மே 28: விருதுநகர் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்கதையாக இருப்பதால், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மணிக்கணக்கில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் அவலம் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையின்றி, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான ஊர்களில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், பெண்கள் குடங்களுடன் தெருத்தெருவாய் அலைகின்றனர். அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும், தண்ணீர் தட்டுப்பாடு தொடர்கதையாக உள்ளது. இயற்கையும் ஒத்துழைக்காததால், தண்ணீருக்கு வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 120.07 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால், 41.5 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது சராசரி மழையளவில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகும். நிலத்தடி நீர் குறைந்ததால், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டுவிட்டன. விருதுநகருக்கு குடிநீர் வழங்கும் ஆனைக்குட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூர் குடிநீர் தேக்கங்களில், நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், விருதுநகரில் நீரேற்று நிலையத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் காத்திருந்து தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். மேலும், கூலித்தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் தண்ணீர் பிடிக்கும அவலநிலை உள்ளது. மழை பெய்தால்தான் தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : district ,calamity ,
× RELATED கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை...