×

காரியாபட்டி பகுதியில் போதிய பஸ் வசதி இல்லாத கிராமங்கள் பள்ளி திறக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

காரியபட்டி, மே 27: காரியாபட்டி பகுதியில் கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதியில்லாததால், நகரங்களுக்கு படிக்கச் செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். இதனால், பள்ளி திறக்கும் முன் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சுற்றி கிராமங்கள் அதிகமாக உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிக்காக காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றனர். இவர்கள் காலை 6 மணிக்கு வந்தால்தான் பஸ்களைப் பிடித்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியும். பெரும்பாலான கிராமங்கள் காரியாபட்டியில் இருந்து 10 அல்லது 20 கி.மீ தொலைவில் உள்ளன.

மேலும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த மருதங்குடி, வெள்ளாளக்குளம், மொச்சிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் காரியாபட்டியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் அவலம் உள்ளது.

எனவே, விரைவில் பள்ளி, கல்லூரி திறக்க உள்ள நிலையில், காரியாபட்டி பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு போதிய பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘காரியாபட்டி பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதியில்லை.

இதனால், உரிய நேரத்துக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். கூலியாட்களும் உரிய நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி திறக்கும் முன் போதிய பஸ்களை இயக்கவும், கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : villages ,school ,bus facility ,area ,Kariapatti ,
× RELATED அனைத்து பேருந்துகளும்...