×

குண்டும், குழியுமாக 10 ஆண்டாக பராமரிக்கப்படாத சாலை வாகன ஓட்டிகள் அவதி

காரியாபட்டி, மே 28: காரியாபட்டியில் இருந்து மறைக்குளம் வழியாக நரிக்குடி, ராமேஸ்வரம் செல்லும் சாலை 10 ஆண்டாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காரியாபட்டியில் இருந்து முடுக்கன்குளம், மறைக்குளம் வழியாக நரிக்குடி ராமேஸ்வரத்திற்கு செல்லும் சாலை 35 கி.மீ தூரம் உடையது.

இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலை மற்றும் தேவையான பொருட்களை வாங்குவதற்காக காரியாபட்டி, அருப்புகோட்டை மற்றும் மதுரைக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் எப்போதும் கூட்டமாக இருக்கும். இந்நிலையில், காரியாபட்டி-நரிக்குடி சாலையை 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்காததால் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அடிக்கடி உயிரிழப்பும் ஏற்படுகிறது. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக முடுக்கன்குளத்தில் இருந்து இலுப்பைக்குளம் வரை பத்து கி.மீ தூர சாலை மிகவும் மோசமாக உள்ளது.

இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பெயருக்கு ஆங்காங்கே சாலைகளில் ஒட்டுப் போடும் பணி நடக்கிறது. அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் வரும் பஸ்கள் அடிக்கடி பழுதடைகின்றன. கிராமப்புற பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியவில்லை. எனவே, தரமான சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தங்கதமிழ்வாணன் (திமுக வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர்) கூறுகையில், ‘முடுக்கன்குளம்-இலுப்பைக்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் டூவீலர்கள், ஆட்டோக்கள் செல்ல முடிவதில்லை. பள்ளி மாணவ, மாணவியரும் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் செல்லும் புனித சாலையாகவும் உள்ளது. அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும், பயன்படாத நிலையில் உள்ளது. அரசு பணத்தை கொள்ளையடிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி தரமான சாலை அமைக்க வேண்டும் என்றார்.

இது குறித்து முடுக்கன்குளம் கார்த்திகேய பாண்டியன் கூறுகையில், ‘நரிக்குடி சாலையில் வாரம் இருமுறை விபத்து நடக்கிறது. பல்லாங்குழிச் சாலையாக இருப்பதால், காலை நேரங்களில் வாகனங்களில் வேலைக்குச் செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். கிராமப் பகுதி பொதுமக்கள் அடிக்கடி காரியாபட்டி வந்து செல்கின்றனர். சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : road motorists ,
× RELATED புதுச்சத்திரம்-திருநின்றவூர் இடையே...