×

`கோர்ட்டுக்கு வந்து கேஸை முடிச்சுக் கொடுப்பா’ மதுவிற்பவர்களிடம் புலம்பும் தேனி மாவட்ட போலீசார்

தேனி, மே 28:  தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்டேஷன் ஜாமீனில் வெளிவந்தவர்கள், கோர்ட்டில் வழக்கினை முடித்துக் கொடுக்காமல் போலீசாரை அலைக்கழித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 93 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால், மாவட்டத்தில் உள்ள 607 கிராமங்களிலும் சிலர் அனுமதியின்றி மது விற்பனை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் மாதாந்திர விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதால், கடை கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கிராமங்களில் வேலையின்றி இருப்பவர்களை தேடிப்பிடித்து மதுபாட்டில்களை கொடுத்து விற்பனை செய்யுமாறு கூறுகின்றனர். ஒரு பாட்டில் விற்றால், குறைந்தது 30 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. தினமும் 50 பாட்டில்் விற்பனை செய்தாலே போதும், மாதம் 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

எனவே, ஒவ்வொரு கிராமத்திலும்் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை கைது செய்யும் போலீசார், ஓரிரு பாட்டில்களை மட்டும் கணக்கு காட்டி வழக்குப்பதிவு செய்து விட்டு, ஸ்டேஷன் ஜாமீனில் விட்டு விடுகின்றனர். பின்னர் இவர்கள் கோர்ட்டிற்கு சென்று 6 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி வழக்கினை முடித்து விடலாம். தேனி மாவட்டத்தில் 2 மதுவிலக்கு ஸ்டேஷன் உட்பட 33 ஸ்டேஷன்களிலும் தினமும் குறைந்தது 10 பேரையாவது கைது செய்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக தேர்தல் பணிகளில் ஈடபட்டதால் இவர்களை கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று வழக்கினை முடிக்கவில்லை. இதனால் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பலநூறு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த வழக்குகளை முடியுங்கள் என மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஸ்டேஷன்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.தேர்தல் நடைமுறைகள் முடிந்து தற்போது இயல்பான பணிக்கு திரும்பி உள்ள போலீசார், மதுவிற்பனையில் கைதாகி ஸ்டேஷன் ஜாமீனில் வெளியில் இருப்பவர்களுக்கு போன் செய்கின்றனர்.

ஆனால், போலீஸ் நம்பர் என்பது தெரிந்தாலே மது விற்பவர்கள் போனை எடுப்பதில்லை. விடாமல் பலமுறை போன் செய்தாலும், எப்போதாவது ஒருமுறை போன் அழைப்பினை எடுக்கும் அவர்களிடம்,போலீசார் ‛யப்பா, கோர்ட்டுக்கு வந்து கேஷ முடிச்சுக் கொடுப்பா’ என கெஞ்சுகின்றனர். அதற்கு அவர்கள் ‛சார், எனக்கு ஒரு வாரம் வேலையிருக்கு. அடுத்த வாரம் பார்ப்போம்’ என கூறி விட்டு இணைப்பினை துண்டித்து விடுகின்றனர். அடுத்து அவர்களை தேடிப்பிடித்து வழக்கினை முடிக்கும் முன்னர் போலீசார் மிகவும் சிரமப்பட்டு விடுகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அனுமதியின்றி மது விற்பவர்கள் கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விற்றால் சிறையில் அடைத்து கடும் தண்டனை வாங்கி கொடுத்து விடுவோம். ஆனால், அவர்கள் டாஸ்மாக் கடைகளில் வாங்கிச் சென்று மறுவிற்பனை செய்கின்றனர். இந்த குற்றத்திற்கு ‛ஸ்டேஷன் ஜாமீன், கோர்ட்டில் 6 ஆயிரம் அபராதம்’ மட்டுமே விதிக்க முடியும். இது விற்பனை செய்பவர்களுக்கும் தெரியும்.


ஆனால் ஒரே நபர் பலமுறை கோர்ட்டிற்கு வந்தால் அவர்களை நீதிபதி தண்டித்து விடுவார். இதனால் அனுமதியின்றி மது விற்கும் வழக்கில் சிக்குபவர்கள் கோர்ட்டிற்கு வர மறுக்கின்றனர். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதை போல், தினமும் குறிப்பிட்ட சிலரை கைது செய்ய வேண்டும் என எங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கின்றனர். ஐஏஎஸ்., ஐபிஎஸ், அதிகாரிகள் ஒரே நிமிடத்தில் தீர்க்கக் கூடிய இந்த பிரச்னையில் ஒட்டுமொத்த போலீசாரையும் பாடாய் படுத்தி எடுக்கின்றனர்’ என புலம்பினர்.

Tags :
× RELATED பெரியகுளம் அருகே நீர் வரத்தால் அழகான எலிவால் அருவி