×

சங்கராபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் சிகிச்சைக்கு 10 கிமீ தூரம் செல்லும் மக்கள்

காரைக்குடி, மே 28: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி பகுதி நகராட்சிக்கு இணையாக வளர்ந்துவரும் பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு என ஓ.சிறுவயல் பகுதியில் ஆரம்ப சுகாதாரநிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு உட்பட்டு கானாடுகாத்தான், நேமம், சொக்கலிங்கம்புதூர், கொத்தமங்கலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன. இவ்வூர்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

5000 மக்கள் தொகை உள்ள ஒரு பகுதிக்கு ஒரு கிராமசுகாதார செவிலியர் இருக்க வேண்டும். இந்நிலையில் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் 7 க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் இருக்க வேண்டும். ஆனால் கிராம சுகாதார செவிலியரும் குறைந்த அளவில் தான் உள்ளனர். இதனால் எந்த ஒரு அவசர சிகிச்சை என்றாலும் 10 கி.மீ தூரம் உள்ள ஓ.சிறுவயல் பகுதிக்கு செல்ல வேண்டும். அல்லது காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பு ஊசிகள் போடுவது, பிரசவகால முன் மற்றும் பின் கவனிப்பு செய்வது போன்ற பணிகளை ஒரே கிராம செவிலியர் தான் செய்து வருகிறார். ஆள் பற்றாக்குறை உள்ளதால் அரசின் திட்டங்கள் என்ன உள்ளது என தெரியபடுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மக்கள் தொகைஅதிகம் உள்ள இப்பகுதியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என பலவருடங்களாக கோரிக்கை விடுத்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. இதற்கு மக்கள் பிரதிநிதிகள் உரிய துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதி மிகவும் வளர்ச்சி அடைந்த பகுதியாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். நாய் கடி, பிரசவம் மற்றும் விஷக் கடி உட்பட பிற அவசர சிகிச்சைக்கு என அதிகதூரம் உள்ள ஆரம்பசுகாதாரநிலையத்துக்கு தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதிக்கு என தனியாக ஆராம்ப சுகாதாரநிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : health center ,population ,Sankarapuram ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு