×

முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் தரமற்ற உணவு பொருள் விற்பனை பொதுமக்கள் புகார்

சாயல்குடி, மே 28:  முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதி கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் எந்தவொரு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் இம்மூன்று நகரங்களுக்கு தான் வரவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் 50க்கும் மேற்பட்ட டீக்கடைகள், 20க்கும் மேற்பட்ட ஓட்டல்களும் உள்ளன. இங்கு சில ஓட்டல்களில் தயார் செய்யப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கூறப்படுகிறது.

மாதக்கணக்கில் எண்ணெய்யை மாற்றாமல், புதிதாக வாங்கும் எண்ணெய்யை பழயதுடன் கலந்து உணவுபொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் வாங்கி உட்கொள்ளும் சிறுவர்கள், முதியவர்களுக்கு ஜீரணிக்க முடியாமல் வயிற்று உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் பெரும்பாலான ஒட்டல்களில் பிளாஸ்டிக் இலையும், பிளாஸ்டிக் பேப்பரை வைத்தும் உணவுகள் வழங்கப்படுகிறது.

டீக்கடை, பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள் முதல் அனைத்து கடைகளிலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், பை போன்ற பொருட்களை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் தாராளமாக புழுக்கத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தும் இன்னும் கடைகளில் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. இதனை தடுக்க அவர்கள் முன் வரவில்லை.

மேலும் வாரந்தோறும் முதுகுளத்தூரில் வியாழக் கிழமையும், கடலாடியில் வெள்ளிக் கிழமையும், சாயல்குடியில் சனிக் கிழமையும் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு விற்கப்படும் உணவு பொருட்களும் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறையினர். பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,Mudukulathur ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...