×

பட்டுக்கோட்டையில் சிலம்பம் போட்டி, சிலம்ப கலை விழா 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அசத்தல்


பட்டுக்கோட்டை, மே 28: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் 3 மாவட்டங்களுக்கு இடையேயான சிலம்பம் போட்டி மற்றும் சிலம்பக்கலை விழா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில்  நடந்தது.டிஎஸ்பி கணேசமூர்த்தி துவக்கி வைத்தார். போட்டிகளில் 5 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு இடையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 33 மாவட்டங்களிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சிலம்பக்கலை விழா ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை பண்ணவயல் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாதம்பி  கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக வீரவிளையாட்டுக்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் ஊர்வலத்திலேயே வாள்வீச்சு, சுருள்வீச்சு, கட்டாவி, மான்கொம்பு, சிலம்பாட்டம் போன்றவைகளை மாணவ, மாணவிகள் செய்து காண்பித்தனர். ஊர்வலம் சின்னையாதெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திலிருந்து புறப்பட்டு மணிக்கூண்டு, தலையாரிதெரு, தேரடித்தெரு, பெரியகடைத்தெரு, தலைமை தபால் நிலைய சாலை வழியாக காசாங்குளம் அண்ணா அரங்கத்தை அடைந்தது.

 தொடர்ந்து அண்ணா அரங்கம் முன்பு பொதுமக்கள் மத்தியில் தமிழக வீரவிளையாட்டுகளை கொண்டு சேர்க்கும் வகையில் மாணவ, மாணவிகள் சிலம்பம், வாள் மற்றும் சுருள்வீச்சு,  தீப்பந்தம் போன்றவைகளை செய்து அசத்தினர். இதில் வாள் மற்றும் சுருள்வீச்சும், தீப்பந்தம் சுற்றியதும் பார்ப்பவர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு, ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்தர் ஆகியோர் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினர்.விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தஞ்சை மாவட்ட சிலம்ப அணிக்கு  காங்கிரஸ் தேசிய விவசாய அணி  ஒருங்கிணைப்பாளரும், இந்திராகாந்தி யூத் பவுண்டேசன் தலைவருமான மகேந்திரன் சார்பில் கோப்பை வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும்  அணைக்காடு சிலம்பக்கூட பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சிலம்பக் கலை விழாவை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

Tags : competition ,Silambam ,Silambam Cinema 200 ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு