×

கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் அலட்சியத்தால் விரயமாகும் மின்சாரம்

கும்பகோணம், மே 28: கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் வெளியில் செல்லும் போது மின் விசிறியை அணைக்காமல் செல்வதால் மின்வாரம் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் நகரத்திலுள்ள 45 வார்டுகளின் நிர்வாகங்கள், வரி செலுத்துவது, மின்சாரத்துறை,  சுகாதார அலுவலகம்   உள்ளிட்ட  பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நகர பகுதியிலுள்ளவர்கள் வரி மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு வந்து செல்வார்கள். கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் உள்ளனர்.இந்நிலையில் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, போதுமான மின்சாரம் வரத்து இல்லை. அதனால் மின் தடை ஏற்படுகிறது. மேலும் கோடை காலம் என்பதால் மின் தடை இன்னமும் அதிகமாகும் என்று கூறுகின்றனர்.

ஆனால் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் சுமார் 25  அலுவலர்கள் அமரும் அலுவலகத்தில், ஒவ்வொருவருக்கும் மின் விசிறி உள்ளது. அலுவலர்கள் நேற்று மதியம் உணவருந்த சென்றநேரத்தில் அலுவலகத்தில் ஆளில்லாமல் அனைத்து மின்விசிறிகளும் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது வீணாக மின் விசிறி ஓடிக்கொண்டிருப்பதை புகைப்படம் எடுப்பதை பார்த்த, ஒரு பெண் அலுவலர் உடனடியாக அலுவலர்கள் இல்லாத இடத்திலுள்ள மின் விசிறியை அணைத்தார்.இதுகுறித்து நகராட்சியில் இருந்த பெண் அலுவலர் ஒருவரை கேட்டபோது, அலுவலர்கள் இருக்கையை விட்டு செல்லும் போது, மின் விசிறியையும், மின் விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் அனைவரின் இருக்கையின் அருகில் ஒட்டப்பட்டும், அவர்கள் கண்டுகொள்ளாமல் செல்வது வேதனையான விஷயமாகும்.தற்போது, அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் மின் சிக்கனத்தை கடைபிடிக்காமல்,மின் விசிறியை ஓடவிட்டு  செல்வது மின் சிக்கன உத்தரவை அலட்சியப்படுத்துவதாகும்.எனவே மாவட்ட நிர்வாகம்,வருங்காலத்தில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், எச்சரிக்கையைமீறி பொறுப்பில்லாமல் செயல்படும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Municipal Corporation ,Kumbakonam ,
× RELATED அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி