×

தஞ்சை மாவட்டத்தில் 9 தாலுகாக்களிலும் 30ம் தேதி ஜமாபந்தி துவக்கம் ஜூன் 18ம்தேதி வரை நடக்கிறது

தஞ்சை, மே 28: தஞ்சை மாவட்டத்தில் வருகிற 30ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் ஜமாபந்தி என்ற வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1428 பசலிக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெற உள்ளது. தஞ்சை வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் தலைமையிலும், பூதலூர் வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருவையாறு வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், பாபநாசம் வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் வரும் ஜூன் 11ம் தேதி வரை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், பேராவூரணி வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) தலைமையிலும், ஒரத்தநாடு வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், கும்பகோணம் வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தலைமையிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் வரும் ஜூன் 7ம் தேதி வரை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் சனி, ஞாயிறு, திங்கள்கிழமை நீங்கலாக தினமும் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெறும் நாட்களில் பட்டா மாறுதல், எல்லை பிரச்னைகள், பொதுமக்கள் வீட்டுமனை ஒப்படை, நில ஒப்படை, முதியோர் உதவித் தொகை ஆகிய கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு அளித்து தீர்வு காணலாம். மேலும் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நிறைவு நாளன்று அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் விவசாயிகள், பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்), வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, புள்ளியல் துறை ஆகியவற்றின் உட்கோட்ட அலுவலர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் பாசனம் தொடர்பான கருத்துருக்கள், முன்மொழிகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


Tags : district ,Tanjore ,
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...