×

சீர்காழி பகுதியில் பருத்தி விலை கிடு கிடு உயர்வு

சீர்காழி, மே 28: சீர்காழி பகுதியில் பருத்தி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு, மங்கைமடம், கீழ சட்டநாதபுரம், திருவாலி, நெப்பத்தூர், திருநகரி, புது துறை, காத்திருப்பு, அல்லி விளாகம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், இளைய மதுக்கூடம், வைத்தீஸ்வரன் கோயில், கதிராமங்கலம், எட குடிவடபாதி கீழ ச்சாலை, தென்னலக்குடி, புத்தூர், மாதானம், பச்சை பெருமாநல்லூர், அரசூர், எருக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டிருந்தனர்.  தற்போது இந்த பருத்திகள் வெடித்து அறுவடைக்கு தயாராக உள்ளன. வெடித்த பருத்தியை விவசாயிகள் ஆட்களை வைத்து எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருத்தி ஒரு குவிண்டால் ரூ.4,600 விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பருத்தியின் விலை மாறுபடும் என விவசாயிகள்  தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால் பருத்தியின் வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது. லேசான மழை செய்திருந்தால் பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கிடைத்திருக்கும். மழை முற்றிலும் பெய்யாததால் பருத்தி மகசூல் குறைவாக உள்ளது. தற்போது பருத்திகள் வெடித்து எடுக்கும் பணியில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காலகட்டங்களில் மழை பெய்தால் பருத்தி முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பருத்தி வியாபாரி கீழ சட்டநாதபுரம் ரவி கூறுகையில், சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர் இந்த பருத்தி தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இங்கு கிடைக்கக் கூடிய பருத்திகள் திருப்பூர், சேலம், பொள்ளாச்சி, பழனி, கொங்கணாபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பருத்தி அரவை மில்லுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பருத்தி விலை சற்று உயர்ந்து விற்கப்படுகிறது. வருங்காலங்களில் இந்த விலை மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப மாற வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags : Cotton price hike ,area ,Sirkali ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு