×

விவசாயிகள் மகிழ்ச்சி காவிரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம்

நாகை, மே 28: காவிரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முற்பட்டால் அனைத்து கட்சி மற்றும் மக்களை திரட்டி வலுவான போராட்டத்தை நடத்துவோம் என்று நாகை அருகே  காமேஸ்வரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை அருகே காமேஸ்வரம் மாரியம்மன்கோயில் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடலோர பிரதேசக் குழு சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியதை கண்டித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

செயற்குழு தலைவர் முத்துப்பொருமாள் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசினார். கூட்டத்தின் முடிவில் நாகை,  காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த 158 கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஓன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி சீர்காழி, தரங்கம்பாடி, நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், கோட்டுச்சேரி, திருமலைராயன்பட்டினம் ஆகிய இடங்களில் நிறைவேற்ற இருக்கும் இந்த திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாய நிலங்களையும், கடல் பகுதிகளையும் பாழாக்க கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி கடைமடை பகுதியில் செயல்படுத்த முற்பட்டால் அனைத்து கட்சி மற்றும் மக்களை திரட்டி வலுவான தொடர் போராட்டங்களை நடத்துவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் காமேஸ்வரம், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, பிஆர்.புரம்  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : basin area ,Cauvery ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி