×

கூத்தாநல்லூர் பகுதியில் டிராக்டர் உதவியுடன் கோடை உழவு பணிகள் தீவிரம்

கூத்தாநல்லூர், மே 28: கூத்தாநல்லூர் பகுதிகளில்  குறுவை சாகுபடிக்காக டிராக்டர்களை கொண்டு விவசாய நிலங்களில் கோடை உழவுப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. டெல்டா பகுதிகளில் விவசாயம் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களை கொண்டதாக இருந்து வந்த நிலையில் மழையின்மை, வறட்சி, காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் போனது உள்ளிட்ட முக்கிய காரணங்களால் இரண்டு போக சாகுபடியாக விவசாயம் மெல்ல குறைந்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டுமே  காலம் தவறியும் ,அளவில் குறைந்தோ ,அளவுக்கு அதிகமாகவோ பெய்து விவசாயத்தை பெரும் கேள்விக்குறி ஆக்கிவிட்டபடியால்  டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் சாகுபடி ஒரே போகமாக மட்டுமே பயிர் செய்யப்பட்டு வருகிறது.    குறுவை சம்பா உள்ளிட்ட சாகுபடி காலங்களில் ஏர் உழுதல், விதை விதைத்தல், நாற்றுபறித்தல், நிலங்களை பண்படுத்துதல், நடவு நடுதல், களை எடுத்தல், உரமிடுதல் என தொடர்ச்சியாக விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் இருந்து வந்தது.ஆனால் சாகுபடி ஒரே போகமாக மாறிப்போனதை அடுத்து மேற்கண்ட பணிகளுக்கும் வாய்ப்பின்றி விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர். மேலும் தற்போது விதை விதைத்தல் நாற்றுபறித்தல் நடவு நடுதல் போன்றவைகளுக்கு வேலையே இன்றி, ஒரேயடியாக தெளிப்பு முறை விவசாயம்தான் விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த முறையில் விவசாய நிலங்களை கோடை உழவுசெய்து, பின் அதை புழுதியடித்து மழை நெருங்கியதும் அந்த நிலத்தில் நெல் விதைகளை தெளித்து விடுவதும், அந்த விதைகள் முளைத்து அப்படியே விடப்பட்டு பின்னர் அறுவடை செய்யப்படுவதும் தான் தெளிப்பு முறை விவசாயம் என்பதாகும். இந்த முறையில் விவசாயத்திற்கு செய்யப்படும் செலவுகளில் பாதியளவு குறைந்து விடுவதாலும், மழை மற்றும் வறட்சி காரணத்தால் தெளிப்பு பயிர் சேதமடைந்தால் பெரிய நஷ்டத்தை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி விடாது என்பதுமே தெளிப்பு முறை விவசாயத்திற்கு முக்கிய காரணமாகும்.     ஜுன் மாதம் எப்படியாவது மேட்டூர் அணை திறந்து விடப்படும் என்கிற நம்பிக்கையிலும், தென்மேற்கு பருவமழை ஜுன் மாதம் தொடங்கிவிடும் என்கிற எதிர்பார்ப்பிலும் தற்போது தெளிப்பு விவசாயத்தை மேற்கொள்ள  நிலங்களை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கூத்தாநல்லூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் கோடை உழவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில்  உழவு மாடுகளை கொண்டு ஏர் உழுவதும் மாறிப்போய் , தற்போது டிராக்டர்களின் உதவியோடு உழவுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.     இந்த உழவுப்பணிகளின்போது நிலங்களில் மேற்புற மண் புரட்டி விடப்படுவதோடு அதனால்  கோடை காலங்களில் நிலத்தில் ஏற்பட்டிருந்த  வெப்பம் வெகுவாக குறைக்கப்படும். மற்றும் நிலங்களில் முளைத்து கிடக்கும் களைப்பயிர்களும் அழிக்கப்பட்டு அவைகள் அதே நிலத்திற்கு உரமாக மாற்றப்படும். லேசான மழை பெய்யும் நேரத்தை பயன்படுத்தி கோடை உழவு செய்யப்பட்டு புழுதி அடிக்கப்பட்ட நிலங்களில் பதப்படுத்தப்பட்ட  விதை நெல் தெளிக்கப்படும்.


Tags : Summer tractors ,area ,Koothanallur ,
× RELATED ஆற்றங்கரையோரம் மட்டுமே ஆடிப்பெருக்கை...