×

நாகை புதிய கடற்கரையில் கோடைவிழா நடத்த வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

நாகை, மே28: நாகை புதிய கடற்கரையில் கடற்கரை கோடை விழா நடத்த வேண்டும் என்று நாகை பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். நாகை என்றால் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல் ஆகிய மூன்று மதங்களின் வழிபாட்டு தலங்கள் உள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதற்கு அடுத்தபடியாக நாகூர் தர்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். உள்ளூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடமாக கருதினால் சிக்கல், நாகை புதிய கடற்கரை ஆகிய இரண்டும் ஆகும். இதில் விழாகாலங்களில் தான் அதிக அளவில் சிக்கல் சிங்காரவேலர் சன்னதிக்கு வந்து செல்வார்கள். ஆனால் தினந்தோறும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள் என்றால் அது நாகை புதிய கடற்கரைக்கு தான். இவ்வாறு தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாகை புதிய கடற்கரையில் கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நெய்தல் என்ற தலைப்பில் கடற்கரை கோடைவிழா 3 நாட்கள் நடந்தது.

இதில் அரசுதுறை சார்பில் நாட்டியம், நடனம், நாய்கள் கண்காட்சி என்று பல வகையான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மாலை நேரத்தில் நடத்தப்பட்டது. இலவச நுழைவு என்பதனால் இந்த 3 நாட்களும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து கண்டு மகிழ்ந்து சென்றனர். இந்த ஆண்டு இதேபோல் கடற்கரை கோடை விழாவை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்று நாகை பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: நடத்தை விதிகள் நேற்று (27ம்தேதி) முடிவுக்கு வந்துவிட்டது. இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துவிட்டதால் அரசு தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்தலாம். இதன்படி கடற்கரை கோடை விழாவை மாவட்ட நிர்வாகம் நடத்தலாம்.

பள்ளிகள் வரும் ஜீன் மாதம் 3ம் தேதி திறக்கப்படவுள்ளது. அக்னி நட்சத்திரம் நாளை (29ம் தேதி) யுடன் நிறைவு பெறுகிறது. இருப்பினும் பள்ளிகள் திறப்பதற்குள் கடந்த ஆண்டு நடத்தியது போல் இந்த ஆண்டும் கடற்கரை கோடை விழாவை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும். நாகையை பொருத்தவரை பொழுதுபோக்கு அம்சங்கள் என்பது எதுவும் இல்லை. மாலை நேரத்தில் வீடுகளில் அடைத்து இருப்பவர்கள் தங்களது பொழுதை இனிமையாக கழிக்க நாகை புதிய கடற்கரைக்கு தான் வரவேண்டிய நிலை உள்ளது. அப்படி இருக்கும் போது இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால் இன்னும் இனிமையாக பொழுது கழியும் என்று கூறினர்.

Tags : Civilians ,summer festival ,beach ,
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை