×

கூத்தாநல்லூர் மார்க்கெட் ரோட்டில் மரண பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாய நிலை

கூத்தாநல்லூர், மே 28: கூத்தாநல்லூர் மார்க்கெட் ரோட்டில் வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும்  ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கும்  பள்ளத்தை மூடவேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கூத்தாநல்லூர் பாய்க்கார பாலம் அருகே அமைந்து இருப்பது கூத்தாநல்லூர் மார்க்கெட் ஆகும். இதன் அருகில் தான் கூத்தாநல்லூர் பொதுகுடிநீர் மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் அமைந்து இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் செல்லும் மரக்கடை சாலை கூத்தாநல்லூர் பகுதியில்  இருந்து பல கிராமங்களையும் இணைக்கிறது.இந்த சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. இப்படிப்பட்ட முக்கிய சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே குடிநீர் குழாய் செல்லும் பாதையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது.

இந்த பள்ளம் எந்த நேரமும் திறந்தே கிடப்பதால் வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயமும், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளோ, வயது முதிர்ந்த பெரியவர்களோ விழுந்து விடும் அபாயமும் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் விழுந்து விடும் ஆபத்தும் அதிகம் உள்ளது.எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பள்ளத்தை மூடி விபத்துகள் ஏற்படாத வகையில் தடுக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : death ,Koothanallur Market Road ,
× RELATED கிணற்றில் முழ்கி சிறுவன் சாவு