×

விசாரணை நடத்த வலியுறுத்தல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளை வெளியேற்றிய கலெக்டர்

மதுரை, மே 28: மக்கள் குறைதீர் கூட்டத்தில் தேவையில்லாத அரசுத்துறை அதிகாரிகளை கலெக்டர் வெளியேற்றினார். மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் குறைதீர் முகாம், விவசாயிகள் குறைதீர் முகாம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட முகாம்கள் ரத்து செய்யப்பட்டன. தேர்தல் முடிந்து, நேற்று முன்தினம் (மே.26) தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், கடந்த 77 நாட்களுக்கு பின் நேற்று மதுரையில் மக்கள் குறைதீர் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மதுரை மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கைக்காக பொறுப்பு ஏற்ற புதிய கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக கூட்ட அரங்கில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, மின்வாரியம் என அனைத்து அரசுத்துறையின் அலுவலர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கிய போது, கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்கள், செல்போன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இதனை கவனித்த கலெக்டர், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எத்தனை துறையினர் நடவடிக்கை எடுத்தனர் என ஆய்வு செய்தார். அப்போது, 450க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, அதில் 16 மனுக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்த கலெக்டர். வேதனை அடைந்தார். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை என்றால், எதற்காக அதிகாரிகள். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு அப்படியே நேராக வீட்டிற்கு சென்றுவிடுவீர்கள் எனக் கூறி அலுவலர்களை கடிந்து கொண்டார்.

மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட அரசுத்துறை அலுவலர்களிடம் எந்த துறையை சேர்ந்தவர்கள் என ஒவ்வொருவரிடமும் விசாரித்தார். வருவாய்த்துறை உள்ளிட்ட சில துறை அதிகாரிகளை மட்டும் இருங்கள் மற்ற துறை அதிகாரிகள் அனைவரும் அலுவலகத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்ளுங்கள் என கூறி அனைவரையும் வெளியே அனுப்பினார். பின்பு மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

தேர்தலுக்கு பின்பு நடந்த முதல் குறைதீர் முகாம் என்பதால், மனு கொடுக்க வந்தவர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பட்டா மாறுதல் கோரியும், முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் வேண்டியும் என மொத்தம் 268 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை துறை அலுவலர்களுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

Tags : Commissioner ,crowd meeting ,crowd ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...