×

வையம்பட்டி அருகே தண்ணீர் தொட்டி தேடி வந்த புள்ளி மான் நாய்களிடமிருந்து காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு

மணப்பாறை, மே 28:  வையம்பட்டி அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த மானை நாய்களிடமிருந்து காப்பாற்றி வனத்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.  மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது பஞ்சதாங்கிமலை. இந்த மலையில் ஏராளமான மான்கள், காட்டெருமைகள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் உள்பட பல வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது, நிலவும் கடும் வறட்சியால் இந்த மலையில் வாழும் வன விலங்குகள் தண்ணீர் தேடி கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு அடிக்கடி வருகின்றன. நேற்றுமுன்தினம் பஞ்சதாங்கி மலை அடிவாரத்தில் உள்ள கிணத்துப்பட்டி என்ற கிராமத்திற்கு 3 வயதுடைய 50 கிலோ எடையுடைய மான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. இதனை கண்ட அப்பகுதி நாய்கள் மானை துரத்தி சென்றன. மானும் சத்தத்துடன் அங்கும் இங்குமாக நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியது. இதனை கண்ட கிராம மக்கள், நாய்களிடமிருந்து மானை மீட்டு, தண்ணீர் மற்றும் தாவர இழை தழைகளை வழங்கினர். பின்பு, பாதுகாப்பாக மானை திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனப் பகுதியில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : vicinity ,Vayampatti ,forest ,
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு