×

முசிறி, தொட்டியம் தாலுகாவில் ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால்களை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

தா.பேட்டை, மே 28:  முசிறி, தொட்டியம் தாலுகாவில் உள்ள ஏரி குளம், குட்டை, வரத்து வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.  முசிறி தொட்டியம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலும் ஏரி, குளம், குட்டை போன்ற நீர் ஆதாரங்களை நம்பியும், நிலத்தடி நீர் மற்றும் பருவ மழையை நம்பியே விவசாயம் செய்யும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தற்போது கடும் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக பெய்யும் கோடை மழையும் இப்பகுதி விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. காவிரி ஆற்று பாசனத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளும் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகளை மேற்கொள்ளாமல் நிலங்களை அப்படியே போட்டுள்ளனர். இதேபோல முசிறி தாலுகாவில் உள்ள தும்பலம், முத்தம்பட்டி, சேருகுடி, சூரம்பட்டி, தா.பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவும், கிணற்று பாசனத்தை நம்பியும் உள்ளது. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனதால் விவசாயிகள் தங்களது  விளை நிலங்களில் ராட்சத போர்வெல் அமைத்து அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்கின்றனர்.

வறட்சியும், மழையும் பொய்த்து போனதால் போர்வெல்லிலோ தண்ணீர் இல்லாமல் பல ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போனதற்கு காரணமாக நிலவியல் வல்லுநர்கள் அதிகளவு மரங்களை வெட்டியதும், வனங்களை அழித்ததும், மழை வளம் குன்றுவதற்கு காரணமாக அமைந்தது என்றும் இயற்கை வளங்களை காக்க தவறியும் நிலத்தடி நீரை போர்வெல் மூலம் வெகுவாக உறிஞ்சி எடுத்ததையும் காரணமாக கூறுகின்றனர். எனவே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட அதிகளவு மரங்களை வளர்த்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும், மழை நீரை வீணடிக்காமல் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட செயல்பட வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். எனவே முசிறி தொட்டியம் தாலுகாவில் உள்ள வரத்து வாய்க்கால், ஏரி, குளம், குட்டை ஆகியவற்றை தற்போது உடனடியாக தூர்வாரிட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சிகள் இடங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வரத்து வாய்க்கால், பண்ணை குட்டைகள் ஆகியவற்றை கணக்கெடுத்து தூர்வார உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்காக மாவட்ட அளவிலான பொறியாளர்களை வைத்து தூர்வாரிய பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், மழை நீரை சேமிக்கும் வகையிலும் நீர் ஆதார பகுதிகளை தூர்வார வேண்டியது அவசியமானது என்பதனை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து துரித நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : lake ,pond ,Musiri ,Thottiyam Taluka ,
× RELATED சென்னை குடிநீருக்கு ஆதாரமான வீராணம் ஏரி வறண்டது