×

சொத்துக்களை எழுதிக்கொடுத்ததும் பிள்ளைகள் கைவிட்டனர் முதியோர் உதவித்தொகை கேட்டு முதியவர் மனு வெயிலில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை, மே 28: சொத்துக்களை எழுதிக்கொடுத்ததும் பிள்ளைகள் கைவிட்டதால் முதியோர் உதவித்தொகை கேட்டு மனைவியுடன் மனு அளிக்க வந்த முதியவர் வெயிலின் தாக்கம் தாங்காமல் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, ஆரணி தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சுப்பிரமணி(80) என்பவர், மனைவி மண்ணம்மாள்(72) என்பவருடன் மனு அளிக்க வந்திருந்தார். வரிசையில் நிற்க முடியாமல் தவித்த முதியவரை கவனித்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவரை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். அவரிடம் அதிகாரிகள் நடந்திய விசாரணையில், மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளுக்கு தன்னுடைய சொத்துகளை எல்லாம் பாகப்பிரிவினை செய்து கொடுத்து விட்டதாகவும், தற்போது தங்களை யாரும் பராமரிக்காமல் கைவிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், முதியோர் உதவித்தொகை வழங்கினால் இறுதி காலத்தில் உதவியாக இருக்கும் என உருக்கமாக தெரிவித்தார். அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த முதியவர் சுப்பிரமணியன், சிறிது தூரம் நடந்து செல்ல முயன்றார். அப்போது வெயில் தாங்காமல் திடீரென நிலைத்தடுமாறி மயங்கி விழுந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர்.வயது முதிர்ந்த காலத்தில், பெற்றோரை பராமரிக்காமல் தவிக்கவிடுவதால் பாதிக்கப்படும் முதியவர்கள், குறைதீர்வு கூட்டத்துக்கு வந்து உதவி கேட்டு மனு அளிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்ட பிறகு, அவர்களை பராமரிக்காமல் கைவிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.எனவே, முதியோர் பாதுகாப்பை உறுதி செய்தல், பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகரிக்க செய்வது அவசியமாகி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : elder ,
× RELATED நடுநெற்றிப் பௌர்ணமி-3