×

போக்குவரத்து விதிமீறியோருக்கு எஸ்பி அன்பான அறிவுரை பழநியில் பணிக்கொடை கிடைக்காமல் தவிக்கும் ஓய்வுபெற்ற கோயில் ஊழியர்கள்

பழநி, மே 28: பழநி கோயிலில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களில் பலர் பணிக்கொடை கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக வருமானம் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பல்வேறு பிரிவுகளில் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2012ம்  ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி பழநி கோயில் ஊழியர்கள் பணிக்கொடை கேட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் தனது உத்தரவில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வயதை கருத்தில் கொண்டு பணிக்கொடை சட்டத்தின்படி உரிய பணிக்கொடை வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் பழநி கோயிலில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற அலுவலர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து தற்போது பணிக்கொடை பெற்றுள்ளனர். தவிர, லேபர் கோர்ட் மூலம் சுமார் 55 பேர் பணிக்கொடை உத்தரவு பெற்றுள்ளனர். 130க்கும் மேற்பட்ட எஞ்சிய ஊழியர்கள் பணிக்கொடை கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர். அறநிலையத்துறை நிர்வாகம் நீதிமன்றம் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே பணிக்கொடைகளை வழங்கி வருகிறது.

எனவே, பணிக்கொடை கிடைக்காத எஞ்சிய ஊழியர்கள் நீதிமன்றத்தை நாடுவதற்காக வக்கீல்களை தேடி அலைந்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலர் ஏழ்மை நிலையில் உள்ளனர். வழக்கறிஞர் செலவிற்கு பணம் கொடுக்க முடியாமல் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே, அறநிலையத்துறை நிர்வாகம் பழநி கோயிலில் ஓய்வு பெற்றுள்ள தகுதியுடைய ஊழியர்களுக்கு உடனடியாக பணிக்கொடை வழங்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுபோல் பிற முதுநிலை கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளது.

Tags : Temple ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...