×

குளங்கள், குட்டைகள் நீரின்றி வற்றிவிட்டதால் குடிநீரை தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் மக்கள் காவேரிப்பாக்கம் பகுதியில் அவலம்

காவேரிப்பாக்கம், மே 28: காவேரிப்பாக்கம் பகுதியில் குளங்கள், குட்டைகள் நீரின்றி வற்றிவிட்டதால் குடிநீரை தேடி பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் அவல நிலை உள்ளது.வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சேரி ஊராட்சிக்கு உட்பட்டது உப்பரந்தாங்கல் கிராமம். இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலானோர் விவசாயிகள்.இங்கு பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், உள்ளிட்டவைகள் உள்ளன. இந்நிலையில், தற்போது கோடை வெயிலில் குளங்கள், குட்டைகள் வற்றிவிட்டதால், ஆடு, மாடுகளுக்கும் கூட தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

மேலும், இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பொதுமக்கள் நாள்தோறும் குடங்களுடன் சென்று தண்ணீர் பிடித்து வரும் அவல நிலை உள்ளது. ஆனால், விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி இங்கு தண்ணீர் எடுக்க வரக் கூடாது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எனவே, ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கேப்சன்காவேரிப்பாக்கம் அடுத்த உப்பரந்தாங்கல் கிராமத்தில் குடிநீர் தேடி குடங்களுடன் விவசாய நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்கள்.

Tags : area ,Kavaripakkam ,lands ,farm ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...