×

இடைப்பாடி அருகே சாலையை செப்பனிட கோரி கிராம மக்கள் மறியல்

இடைப்பாடி, மே 28:  இடைப்பாடி அருகே தோண்டிப்போட்ட சாலையை செப்பனிட கோரி, கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைப்பாடி அருகே கன்னந்தேரி ஊராட்சி, 3வது வார்டுக்குட்பட்ட கன்னந்தேரி, பூசாரிக்காடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு, இங்குள்ள சாலையை சீர்செய்வதாக கூறி தோண்டிப்போட்டு சென்றனர். அதற்கு பின்பு அந்த பக்கம் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. தேர்தலுக்கு பின்பு சாலை அமைப்பார்கள் என எதிர்பார்த்து கிராம மக்கள் காத்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிந்த பின்னரும், சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று 100க்கும் மேற்பட்டோர் கன்னந்தேரியில் திரண்டனர். பின்னர், பூசாரிக்காடு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, ஜெயசீலன் மற்றும் கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் விரைந்து சென்று, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : village ,interstate ,road ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி பலி